சென்னை, மார்ச் 29- சென்னை மாவட்டத்தில் ரூ.21.63 கோடியில் அடையாறு ஆற்றின் முகத்து வாரம் முதல் திரு.வி.க. பாலத்தின் கீழ்புறம் வரை அகலப்படுத்தி தூர்வாருதல் பணிக்கு கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், ஆரம்பக்கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நீர் வளத்துறை கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்து பேசிய அமைச்சர், “2018 சூம் ஆண்டில் சென்னை ஆறுகள் மறு சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ் அடையார் ஆற்றின் தொடக்கத்திலிருந்து முகத்துவாரம் வரை சீரமைப்பு பணிகள் ரூ.555.46 கோடியில் 56 குறுகியகால உப திட்டங்களாக 7 துறைகளின் மூலம் செயல்படுத்த எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் திருநீர்மலை முதல் அடையாறு முகத்துவாரம் வரை ஏழு நிலைகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நீர்வளத்துறைக்கு ரூ.104.31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ரூ.73.13 கோடியில் 5 பணிகள் முடிவுற்றுள்ளது” என்றார். பெருநகர சென்னை நீர் வழிகள் மற்றும் நீர் நிலை களை புதுப்பித்து மறுசீரமைக்க பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதன் தொடர் வடிகால்கள், அடையாறு மற்றும் கூவம் ஆற்றின் பெரிய வடிகால்களை சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளையின் நிதியுதவியுடன் ரூ.1281.88 கோடியில் சீரமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது. இதில் நீர்வளத்துறைக்கு ரூ.1014.28 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை, திருவள்ளூர் காஞ்சி புரம் மாவட்டங்களில் அதிகமாக வெள்ள பாதிப்பிற்கு உள்ளாகும் வரத ராஜபுரம், பழைய பெருங்களத்தூர், முடிச்சூர், பள்ளிக்கரணை, ராயப்பா நகர், நந்திவரம், கூடுவாஞ்சேரி, மணலி, வெள்ளி வாயில், கொளத்தூர் மற்றும் மாதவரம் ஆகிய பகுதிகளை பாதுகாக்கும் பொருட்டு அடையாறு மற்றும் கொசஸ்தலை ஆறுகளை அகலப்படுத்துதல், நீர் வழித்தடங் களை மேம்படுத்துதல் மற்றும் வடிகால்கள் அமைத்தல் போன்ற 8 வெள்ளத்தடுப்பு பணிகளை ரூ. 250 கோடியில் மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.