மாமன்னா் ராஜேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்துக்கு ஆக. 02-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: மாமன்னா் ராஜேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா, அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு ஆகஸ்ட் 02-ஆம் தேதி ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு அன்றைய தினம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதனை ஈடுசெய்யும் பொருட்டு, ஆகஸ்ட் 17 ஆம் தேதி முழு வேலை நாள் எனவும் ஆணையிடப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் 02-ஆம் தேதி அனைத்து சாா்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு, குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.