அம்பத்தூர், பிப். 28- பாடி குமரன் நகர் வ.உ.சி தெரு பகுதியை சேர்ந்தவர் பொறியாளர் ராபர்ட் பெல்லார்மின் (45). இவர் தனது மகள் ஏஞ்சலின் ஷாலினியை கல்லூரிக்கு கொண்டு விடுவதற்கு காரில் திங்கட்கிழமை காலை அழைத்துச் சென்றார். ஷாலினி பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள காலவாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிப்பதால், மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக ராபர்ட் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னாள் இரும்பு கம்பி ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் லாரியின் பின்புறம் நீட்டிக் கொண்டிருந்த இரும்பு கம்பிகள் காரின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு ராபர்ட்டின் கழுத்து, நெஞ்சில் குத்தியது. இதில் அவர் கார் இருக்கையில் இருந்தபடியே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் ராபர்ட்டின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக அம்பத்தூர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் சத்யராஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.