districts

img

12 வயது சிறுமியின் கணையத்தில் இருந்த கற்களை அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை!

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக  12 வயது சிறுமிக்கு  பிளவுபட்ட கணையத்தில் அறுவை சிகிச்சை. பழுதடைந்த கணையத்தின் தலைப்பகுதி மற்றும் குழாயில் இருந்த கற்கள் 4 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.

கோவை மாவட்டம், அன்னூர் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் வயது 35. கூலி தொழிலாளி இவரது மனைவி குணலட்சுமி வயது 30. இவர்களது மகள் அனுஸ்ரீ.வயது 12. பள்ளி மாணவி 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமி அனுஸ்ரீ நீண்ட நாட்களாக அடிக்கடி வயிற்று வலி ,வாந்தி, பசியின்மை, காய்ச்சல், வயிற்றுப்போக்கு ,ஆகிய நோய்களால் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.

பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெற்று வந்த போதும் நோய் குணமாகவில்லை எனத் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆனந்தகுமார் தனது மகளை மருத்துவ  சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கூட்டி வந்துள்ளார். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் கண்ணன் ,மேட்டுப் பாளையம், எஸ்.ஜி.கே.மருத்துவமனை சிறப்பு குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் விஜயகிரியுடன் ஆலோசனை நடத்தி அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

முதல் கட்டமாக சிறுமிக்கு சி.டி.எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்ததில் கணையத்தில் பிறவிக் கோளாறு இருப்பதும் கணையத்தில் 2 குழாய்கள் இருப்பதும் அதில் பிரதான குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதும்  தெரியவந்தது. பிளவுபட்ட கணையத்தில் உள்ள முக்கிய குழாயில் திரவம் வடிய முடியாமல் கணையத்தின் தலைப்பகுதி பழுதடைந்து பிரதான குழாயில் கற்கள் உருவாகி  அடைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. உடலில் முக்கியமான உறுப்பு கணையம். கணையம் பாதிக்கப்படும் போது சர்க்கரை நோய், அஜீரணக் கோளாறு உடல் வளர்ச்சி பாதிப்பு ஆகியவை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு அரசு தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் கண்ணன் எஸ் .ஜி.கே மருத்துவமனை சிறப்பு குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் விஜயகிரிஆகியோர் தலைமையில் குழந்தைகள் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர்கள்  குடல் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழு அமைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்  அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கணையத்தின் பழுதடைந்த தலைப்பகுதியை அகற்றிவிட்டு கணையத்தின் குழாய்களைப் பிரித்து குழாய்க்குள் இருந்த கற்களை அகற்றி விட்டு கணையத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது சிறுமி உடல் நலத்துடன் உள்ளார் .

தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் இந்த சிக்கலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதிரி சிக்கலான அறுவை சிகிச்சைகள் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நகர் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மட்டும் செய்யக்கூடிய வசதிகள் உள்ளது. அங்கு இந்த அறுவை சிகிச்சை செய்திட பல  லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.