மயிலாடுதுறை, ஜூன் 17 - மயிலாடுதுறையைச் சேர்ந்த நரிக்குற வர் சமூக மாணவர் ஜம்மு-காஷ்மீரில் நடை பெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் 4 ஆவது யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டி, ஜூன் 11 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்டு விளையாடினர்.
குத்துச்சண்டை போட்டியில் 19 வய துக்கு உட்பட்டோருக்கான பிரிவில், சனிக் கிழமை இறுதிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற மயிலாடுதுறையை சேர்ந்த பல்லவராயன் பேட்டை நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும் வீரசிவாஜி என்ற வீரர், பஞ்சாப் வீரரை எதிர்கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.
வெற்றி பெற்ற தமிழக வீரர் வீரசிவாஜிக்கு சங்கத்தின் செயலர் குர்தீப் சிங் கோப்பையை வழங்கிப் பாராட்டினார். முன்னதாக இவர், ஜூன் 11 ஆம் தேதி அரியானா வீரரை கால் இறுதியிலும், ஜூன் 12 அன்று இமாச்சலப்பிரதேச வீரரை அரை இறுதியிலும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.