districts

img

மாடக்குளம் கண்மாய் சுற்றுலாத் தளமாக்கப்படுமா?

மதுரை, அக்.17- மதுரை மாடக்குளம் கண்மாயை  சுற்றுலாத்தளமாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்து உள்ளது. மதுரை மாநகருக்குள் 326 ஏக்கர்  பரப்பளவில் மதுரை மாநகரின் குடிநீர் தேவைக்கு ஆதாரமாக 167 மில்லியன் கன அடி நீர் தேங்கும் வகையில் அமைந்துள்ளது மாடக் குளம் கண்மாய்.  வடகிழக்குப் பருவமழை அதிக மாக பெய்து வைகை அணை முழுக் கொள்ளளவை எட்டி திறந்துவிடப் பட்டால் மாடக்குளம் கண்மாய் நிரம்பும். 50 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2021-ஆம் ஆண்டு  நவம்பர் 29 -ஆம் தேதி கண்மாய் முழு அளவை எட்டியது.  கடந்த காலங்களில் இந்தக் கண் மாய்க்கு, கொடிமங்கலம் வைகை ஆற்றில் இருந்து நேரடியாக வாய்க்கால் மூலம் தண்ணீர் வந்தது.  நாளடைவில் வாய்க்கால் ஆக்கிர மிக்கப்பட்டது. இதனால் ஆற்றி லிருந்து வாய்க்காலில் தண்ணீர் பெற  முடியாத நிலை ஏற்பட்டது. இதை யடுத்து மாடக்குளம் கண்மாய்க்கு, நிலையூர் கால்வாயில் இருந்து தண்ணீர் பிரித்து வழங்கப்பட்டது. ஆனால், மாடக்குளம் கண்மாய்க்கு  முழுமையாகத் தண்ணீர் கிடைக்க வில்லை. இந்தநிலையில் கொடி மங்கலம் வைகை ஆற்றுப்பகுதியில் ரூ.19 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டது.  கடந்த கால முறைப் படி மீண்டும் மாடக்குளம் வாய்க்கா லில் தண்ணீர் கொண்டு செல்லத்  திட்டமிடப்பட்டது. அதற்காக 12.8  கிலோ மீட்டர் தூரம் உள்ள மாடக் குளம் கண்மாய் தூர்வாரப்பட்டது. அதிலிருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன.

அதே நேரத்தில், மாடக்குளம் கண்மாயில் ஒத்தப் பனை மரம் முதல் அய்யனார் கோவில் வரையுள்ள பகுதியில் உள்ள வெளிப்புற தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. மாடக்குளத்திலிருந்து அச்சம்பத்து பகுதி கரைகள் சுருங்கிவிட்டது. இந்தப் பகுதியையும் பலப்படுத்த வேண்டும். மேலும்  அச்சம்பத்து முதல் முனியாண்டிபுரம் வரையிலான கரை யைப் பலப்படுத்தி தார்ச் சாலையாக மாற்றினால் நடை பயிற்சி செல்பவர் களுக்கு உதவியாக இருக்கும்.  மற்றொருபுறத்தில் விராட்டிபத்து-தேனி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும்.  நாகமலைப் புதுக்கோட்டையி லிருந்து அச்சம்பத்து வழியாக திரு நகரை எளிதில் அடையலாம். இதன்  மூலம் இருசக்கர வாகன நெரிசல் குறையும். அச்சம்பத்து பகுதியில் குடி யிருப்புகளின் கழிவுகள் கலந்து கண் மாயில்  சேருகிறது. இப்பகுதியில் உள்ள  மண் கால்வாயை சிமென்ட் கால்வாயாக  மாற்றினால் கழிவுநீர் உள்ளே வருவது தடுக்கப்படும். மேலும் மாடக்குளம் கரையை 13  அடியாக அகலப்படுத்தும் திட்டமும்  உள்ளது.  கண்மாயை ஆழப்படுத்தி னால் சுமார் 300 மில்லியன் கனஅடி  தண்ணீர் சேமிக்கமுடியும். இதன் மூலம் மாடக்குளத்தைச் சுற்றியுள்ள  பல்லாயிரக்கணக்கான மக்களின் குடிநீர் பிரச்னையை தீரும். நிலத்தடி  நீர்மட்டமும் உயரும் என்கிறார்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்  தலைவர்களில் ஒருவரும் மாடக்குளத் தில் 50-ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் சி.ராமகிருஷ்ணன். மேலும் அவர் கூறுகையில் கண் மாய் ஓரத்தில் உள்ள முள் செடி களை அகற்றி பலன் தரும் மரங் களை வளர்த்தால் இது ஒரு சுற்றுலாத் தளமாக மாறும் வாய்ப்பு உள்ளது என்றார்.

குடியிருப்புகளை சூழும்  மழை நீர்

மாடக்குளம் கண்மாயில் தெற்கு  மடை. வடக்கு மடை. நடுமடை என  மூன்று மடைகள் உள்ளன. இதில் நடு மடையில் சாக்கடைத் தண்ணீரும், மழைநீரும் கலந்தோடிக் கொண்டிருக் கிறது. மாடக்குளம் கண்மாய் நடு மடையிலிருந்து வெளியேறும் நீர் மதுரை புறவழிச்சாலை வழியாக கிருதுமால் நதிக்கு செல்லும்.  கால் வாய் கட்டுமான பணியை மாநக ராட்சி துரைச்சாமிநகர் வி.டி.ஆர்.,  ரோட்டுடன் நிறுத்தி விட்டது. இப்பகுதியில் 12 அடி அகலத்தில்  இருந்த கால்வாய் ஆக்கிரமிக்கப் பட்டு ஐந்து அடியாகக் குறுகி விட்டது.  வி.டி.ஆர்., ரோட்டில் இருந்து புறவழிச் சாலை வரை  ஆக்கிரமிப்பு உள்ளது. கண்மாயில் இருந்து கால்வாய் வழியாக வரும் சாலையில்  பாய்ந்து காலிபிளாட்டுகளில் தேங்கும். மழை  பெய்தால் கண்மாய் நீர் பெருகி இப்பகுதியிலுள்ள வீடுகள் தீவாக மாறிவிடும். இந்தாண்டும் இது தொடரும்.