districts

img

2 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி கடத்திய தேனி மாவட்ட பாஜக நிர்வாகி கைது

தேனி: ஜுலை 23- கேரளாவிற்கு  2 ஆயிரம் கிலோ ரேசன் அரிசியை  கடத்திய  தேனி மாவட்ட பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.  கேரளாவிற்கு, கம்பம்மெட்டு, குமுளி, போடி மெட்டு, வழியே  தினந்தோறும் ரேசன் அரிசி கடத்தல் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் பறந்தன. இதனையடுத்து, தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் தமிழக- கேரளா எல்லைகளை  கண்காணிக்குமாறும் உத்தரவிட்டார்.  இதன் அடிப்படையில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டி  உத்தமபாளையம் சிவில் சப்ளைத்துறை வட்ட வழங்கல் அதிகாரி, பாண்டி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று இரவு கம்பம்மெட்டு சோதனைச் சாவடி அருகில் சந்தேகப்படும்படியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர்.  இதில் கம்பத்தில் இருந்து அதிக வேகமாக வந்த காரை  தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் ரேசன் அரிசி மூடைகள், சிப்பங்களாக கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.  இதனையடுத்து, வாகனத்துடன், உத்தமபாளையம் புட் செல் காவல் நிலையத்திற்கு, கொண்டு வந்தனர். தொடர்ந்து புட் செல் ஆய்வாளர் சுப்புலட்சுமி, நடத்திய விசாரணையில், சிப்பங்களாக கட்டப்பட்ட ரேசன் அரிசி மூடைகளில் மொத்தம் 1983 கிலோ இருந்தது தெரியவந்தது. ரேசன் அரிசியை கடத்தி வந்த உத்தமபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த ராசு மகன்  சுந்தர்  (48), என்பதும்,  இவர்  உத்தமபாளையம் நகர முன்னாள் பாஜக தலைவர் என்பதும், தற்போது,  பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார் என்பதும் தெரியவந்தது. வாகனத்தில் இருந்த  50 கிலோ அடங்கிய 40 சிப்பம் மொத்தம் 1983 கிலோ ரேசன் அரிசியை கேரளாவுக்கு கடத்தமுயற்சி செய்துள்ளார். ரேசன் அரிசி மூடைகளையும்,  பாஜக நிர்வாகி  சுந்தரையும்,  உத்தமபாளையம் புட்செல் துறை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து, உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் பாண்டியன் கொடுத்த புகாரின் அடிப்படையில், சுந்தர் மீது  வழக்கு பதிவு செய்து கைது. செய்தனர். தொடர் நடவடிக்கை தொடர் வாகனச் சோதனையில் தற்போது அதிகாரிகள்  ஈடுபட்டுள்ளனர்.  இதனால் ரேசன் அரிசி கடத்தல் நபர்கள் பிடிபடுவார்கள் என்றும் தொடர் நடவடிக்கை எடுக்க  திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .