districts

மதுரை முக்கிய செய்திகள்

செப்.10,11 தேதிகளில் டி.என்.பி.எஸ்.சி.  குரூப்-7, குரூப்-8 தேர்வு 

திருநெல்வேலி, செப். 9- தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் சார்பில் இந்துசமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் செயல் அலுவலர், கிரேடு 3-க்கான எழுத்து தேர்வு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.  நெல்லை மாவட்டத்தில்  சனிக்கிழமை கிரேடு 3-க்கான குரூப்-7 தேர்வும், ஞாயிற்றுக்கிழமை செயல் அலுவலர்களுக்கான குரூப்-8 தேர்வும் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றுது. இதில் தேர்வு பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேர்வர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து குறித்தும் தேர்வு மையங்களை தயார் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. சந்தைக்கு வந்த 

சந்தைக்கு வந்த  வியாபாரி மாயம் காவல்துறை தீவிர விசாரணை

திருநெல்வேலி, செப். 9- தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 41). மாட்டு வியாபாரி.  இவர் கடந்த 5-ந் தேதி நெல்லை மேலப்பாளையம் சந்தைக்கு வந்தார். சந்தை முடிந்த பிறகு அவர் நெல்லை புதிய பேருந்து நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்து அவரது மனைவி ராமக்கனியுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நான் வீட்டிற்கு வர நேரமாகும் என்று கூறியுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வீட்டிற்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் ஜெயபால் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.  இதுகுறித்து அவர்கள் மேலப்பாளையம் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா? என விசாரணை நடந்து வருகிறது. மேலும் ஜெயபாலின் செல்போன் எண் மூலமும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மது பழக்கத்தை தாய் கண்டித்தால் வாலிபர் தற்கொலை

தூததுக்குடி , செப். 9 தூத்துக்குடியில் மது பழக்கத்தை தாய் கண்டித்தால் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி அருகேயுள்ள அந்தோணியார் புரம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி விஜயமுருகன் மகன் அஜித்குமார் (25). இவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவாராம். இதனை அவரது தாயார் கண்டித்துள்ளார். இந்நிலையில் அஜித்குமார் வியாழனன்று   வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் ஆய்வாளர்  வின்சென்ட் அன்பரசி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

பைக்கில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பரிதாப சாவு

தூததுக்குடி , செப். 9 ஆழ்வார்திருநகரி அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கீழே விழுந்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள நாகலட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் மனைவி முத்துகிளி (65), வியாழனன்று தம்பதியர் இருவரும் அப்பகுதியில் நடந்த திருமண விழாவுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். திருச்செந்தூர் மெயின் ரோட்டில் வந்தபோது, வேகத்தடையில் பைக் ஏறி இறங்கும் போது பின்னால் அமர்ந்த முத்துகிளி பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆழ்வார்திருநகரி காவல் ஆய்வாளர்  மணிவண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பைக் விபத்தில் மணமகன் மரணம் : திருமண நாளில் சோகம்

தூததுக்குடி, செப். 9 தூத்துக்குடியில் வெள்ளியன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், பைக் விபத்தில் மணமகன் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி பொட்டல்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ஜெகதீஷ் (27). உப்பளத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு வெள்ளியன்று காலை 9 மணிக்கு திருமணம் நடைபெற இருந்தது. வியாழன்  இரவு திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது. இந்நிலையில் வெள்ளியன்று காலை 6.30 மணியளவில் ஜெகதீஷ், தனது பைக்கில் துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பைக் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் ஜெய்சீலன் மற்றும் போலீசார் சம்பவ இட  த்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளியன்று காலை திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் பலியான சம்பவம் திருமண வீட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

நாகர் கோவில்,செப் 9 கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவி யர்கள் உயர்கல்வி பயில்வ தற்கான வழிகாட்டி நிகழ்ச்சி யானது வடசேரி அரசு மேல் நிலைப்பள்ளியில் வெள்ளி யன்று (09.09.2022) நடை பெற்றது.  இந்நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த், துவக்கி வைத்து பேசுகையில்:- தமிழக அரசு அரசு பள்ளிகளில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு முடித்த மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில்வதற்கும் அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கு வது குறித்தும் அனுபவம் மிக்க அலுவலர்களால் பயிற்சி வழங்கப்பட்டு வரு கிறது. மேலும், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், கலை மற்றும் அறிவியல் படிப்புகள், ஊடகவியல் சார்ந்த படிப்புகள் என பல்வேறு உட்பிரிவுகளில் சேர்ந்து பயில்வதற்கான வகுப்பு கள் வழங்கப்படுவதோடு, கல்லூரி கல்விக்காக வங்கி கள் வாயிலாக கடன் பெறு வது மற்றும் கல்லூரி படிப்பிற்கான உதவித் தொகை பெறுவது குறித்தும் மாணவ, மாணவியர்களா கிய நீங்கள் தெரிந்துக் கொள்வதோடு, போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு ஆயத்தமாக நூலகங்களு க்கு சென்று புத்தகம் வாசிப்பதோடு, பொது  அறிவு சார்ந்த புத்தகங் களை நாள்தோறும் வாசித்திட பழகி கொள்ள வேண்டும் என்றார்.

சிறிய ஜவுளிப்பூங்கா அமைக்க  தொழில் முனைவோருக்கு ஆட்சியர் அழைப்பு

நாகர் கோவில்,செப் 9 ஜவுளித்துறையில் முன்னோடி மாநி லங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகி றது. இத்துறையின் கட்டமைப்பை வலுப் படுத்த அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வச திகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங் கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற் றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது. தற்போது தொழில் முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளித் தொழிற் கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்க ளையும் சேர்த்து தமிழ்நாடு அரசினால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவ னங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு மாவட் டத்தில் வேலைவாய்ப்பு பெருகும், அதிக ளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். எனவே, சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை கன்னியாகுமரி மாவட்டத்தில் பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் அனைத்து தொழில்முனைவோரும் முன்வர வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்துள்ளார்.  இத்திட்டம் தொடர்பான விவரங்க ளுக்கு 39, விஸ்வநாதபுரம் மெயின் ரோடு, மதுரை 14 எனும் முகவரியில் உள்ள துணிநூல் துறை மதுரை மண்டல துணை இயக்குநரைத் தொடர்பு கொள்ளலாம் (தொடர்பு எண்கள்.9944793680, 9659532005) என தெரிவித்துள்ளனர்.

அண்ணா பிறந்தநாள்: மிதிவண்டி போட்டிகள்

தூததுக்குடி , செப். 9 காலஞ்சென்ற தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் 15.09.2022 அன்று மாவட்ட விளையாட்டரங்கத்தில் மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான  மிதிவண்டி போட்டி  நடத்தப்பட உள்ளது.   இந்த போட்டி 3 பிரிவுகளில் நடத்தப்படுகிறது. 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 10 கிலோ  மீட்டர் தூரமும் நிர்ணயிக் கப்பட்டுள்ளது.15 வய துக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்க ளுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவி களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்க ளுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.   இப்போட்டியில் முதல் மூன்று இடங்க ளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ 5000, ரூ 3000, ரூ   2000,  வீதமும் 4 முதல் 10ஆம் இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.250, வீதம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.  போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவியர் தங்கள் சொந்த செலவில் இந்தியாவில் தயாராகும் சாதாரண சைக்கிளை கொண்டு வருதல் வேண்டும். சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் 15.09.2022 அன்று காலை  6.00 மணிக்கு தூத்துக்குடி விளையாட்டரங்கத்திற்கு தலைமை யாசிரி யரிட மிருந்து பெறப்பட்ட வயதுச் சான்றிதழுடன் வருகைதர வேண்டும். வயதுச் சான்றிதழ் கொண்டு வருபவர்கள் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். இந்த மாவட்ட அளவிலான சைக்கிள்  போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட விளை யாட்டரங்கத்தில் இருந்து ஆரம்பித்து ஜார்ஜ் ரோடு , பெல் ஹோட்டல் கார்னர்,  ரோச் பூங்கா,  பீச் ரோடு இரயில்வே கேட்,  ஹார்பர் ரவுண்டானா வரை சென்று திரும்பவும் அதே வழியில் மாவட்ட விளையாட்டரங்கம் வந்தடையும். மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர்  கி.செந்தில்ராஜ்  தெரிவித்துள் ளார்.

நெல்லையில் பொருட்காட்சி : ஏற்பாடு தீவிரம்

திருநெல்வேலி ,செப். 9- நெல்லை டவுனில்  மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள இடத்தில் ஆண்டு தோறும் அரசு சார்பில் பொருட்காட்சி அமைக்கப்படுவது வழக்கம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதால் பொருட்காட்சி நடத்த முடியா மல் போய்விட்டது.கொரோனா காரணமாக வும் கடந்த 2 ஆண்டுகளாக பொருட்காட்சி நடத்தப்பட வில்லை. இந்நிலையில் அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கும் வகையில் நெல்லையில் இந்த ஆண்டு பொருட்காட்சி நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் வ. உ. சி. மணிமண்டபம் பின்புறம் தனியாருக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்து அங்கு பொருட்காட்சி அமைக்க மாவட்ட நிர்வா கம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம்  முடிவு செய்தது. இதையடுத்து அந்த இடத்தில் பொருட் காட்சி நடத்துவதற்கான பூமி பூஜை கடந்த ஜூலை 27-ஆம் தேதி நடத்தப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்தில் அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கியது. அரசின் வேளாண் துறை, வனத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பிலும் அங்கு சுமார் 36 அரங்குகள் அமைக்கப் பட்டு வருகின்றன.  ஒவ்வொரு அரங்கிலும் அந்தந்த துறை யின் சார்பில் இதுவரை நெல்லை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பணிகள் சாதனைகள் உள்ளிட்டவை குறித்த விளக் கங்கள் காட் சிப்படுத்தப்பட்டிருக்கும். வேளாண்துறை அரங்கத்தில் நெல் விதைகள், உரங்கள், வேளாண் துறையால் நெல்லை மாவட்டத்திற்கு கிடைத்துள்ள பயன்கள் உள்ளிட்டவை இடம் பெற்றி ருக்கும். இதே போல் அனைத்து துறையின ரும் தங்களது துறையின் பணிகளை காட்சிபடுத்தியிருப்பார்கள்.  இது தவிர பொதுமக்கள் தங்களது பொழுதை போக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ ராட்டினங்கள், துரித உணவு கடைகள் உள்ளிட்ட பல்வேறு  அரங்குகள் அமைக்கும் பணிகள் தீவிர மாக நடைபெற்று வருகிறது. வருகிற 16 அல்லது 18-ஆம் தேதிக்குள் பொருட்காட்சி திறக்கப்படலாம் என்றும், அதிகபட்சம் 45 நாட்கள் நடைபெறும் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆயுதப்படை, காவலர் குடியிருப்பில் எஸ்பி திடீர் ஆய்வு

தூததுக்குடி , செப். 9 தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெள்ளியன்று ஆயுதப்படைக்கு நேரில் சென்று காவலர் அங்காடி, காவலர் உணவு விடுதி ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் 3வது மைல் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு நேரில் சென்று குடியிருப்பு வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்து  எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, உதவி ஆய்வாளர் கணேச மணிகண்டன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

புகையிலை விற்ற  2 பேர் கைது: கார் பறிமுதல்

தூததுக்குடி , செப். 9 குலசேகரன்பட்டினம் அருகே காரில் வைத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை  செய்த  2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் மேற்பார்வையில் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ரெகுராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் தனிப்படை காவலர்கள் வியாழனன்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வேதகோட்டைவிளை ஞானியார் குடியிருப்பு ரோட்டில் உள்ள ஒரு பள்ளி அருகே, காரில் வந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர். இதில், கோட்டன்காடு முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் மகன் வைகுண்டபாலன் (22) மற்றும் வேதகோட்டைவிளை பகுதியை சேர்ந்த இளையபெருமாள் மகன் சங்கர் (39) ஆகியோர் காரில் வைத்து, சிறுவர்களுக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் 2பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 36 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர் மழையால் அய்யலூரில் 10 ஆயிரம் ஏக்கர்  தக்காளி செடிகள் நாசம்

திண்டுக்கல்,செப்.9- தொடர் மழையின் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பகுதியில் பத்தாயிரம் ஏக்கர்  தக்காளி செடிகள் நாசமானது  அய்யலூர் தக்காளி சந்தைக்கு தக்காளி வரத்து குறைவு காரணமாக பல மடங்கு விலை அதிகரித்துள்ளது திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் தக்காளி சந்தை உள்ளது இந்த சந்தைக்கு சுற்றுவட்டார கிராமங்களான கடவூர்,  காக்காயனூர்,  காக்காயக்கவுண்டனூர்,  மலைப்பட்டி,  கொம்பேறிபட்டி,  புதுப்பட்டி,  சுக்காம்பட்டி,  வடமதுரை,  புத்தூர், உள்ளிட்ட   பல கிராமங்களில் இருந்து தக்காளி விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. அய்யலூர் பேரூராட்சி மற்றும் வடமதுரை ஊராட்சி ஒன்றியம் கிராமங்களில் தக்காளி விவசாயம் தான் பிரதான விவசாயமாக உள்ளது கிட்டத்தட்ட பத்தாயிரம் ஏக்கரில் தக்காளி விளைவிக்கப்படுகிறது திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தக்காளி பயிர் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. பொதுவாக தக்காளி விளைவதற்கு நல்ல வெயில் தேவை ஆனால் கடும் மழையில் பூக்கள் உதிர்ந்து தக்காளி காய்கள் சேதம் அடைந்து  வரத்து குறைந்துள்ளது இந்த மார்க்கெட்டுக்கு தினசரி 80 முதல் 100 டன் தக்காளி வரத்து இருக்கும் ஆனால் தொடர் மழை காரணமாக தற்போது பத்து டன் தக்காளி தான்  வருகிறது. கடந்த வாரம் வரை  14 கிலோ எடையுள்ள ஒரு தக்காளி பெட்டி ரூபாய் 75 முதல் 100 வரை விற்கப்பட்டது அதாவது 1 கிலோ 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை மட்டுமே விலை போனது  தற்போது ஒரு வார காலமாக தொடர் மழையால் 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி  ரூ. 600 முதல் 700 வரை விலை போகிறது அதாவது ஒரு கிலோ சந்தையிலேயே 50 ரூபாய் முதல் 60 ரூக்கு விற்பனையானது.  மற்ற நாட்களில் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆனால் அந்த மாநிலங்களிலும் தொடர் மழை காரணமாக தக்காளி வரத்து  குறைந்துள்ளது. இதனால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியை தந்தாலும் பத்தாயிரம் ஏக்கர் விளைநிலத்தில் தக்காளி பெயர் நாசமாகி உள்ளதை நினைத்து விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

இராஜபாளையம் பகுதியில் கொப்பரை  தேங்காய் கொள்முதல் செய்ய கால நீட்டிப்பு!

இராஜபாளையம், செப். 9 விருதுநகர் விற்பனைக்குழு வின் கீழ் இயங்கும் இராஜபாளை யம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1200 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து  31-07-2022 வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலை யில் தற்போது 31-09-2022 வரை ஒன்றிய அரசால்  காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால்  31-09-2022 அரவை கொப்பரை தேங் காய் குறைந்த பட்ச ஆதார விலை யில்  கொள்முதல் செய்யப்பட உள்ளது. தரப் பரிசோதனையின் அடிப்படை யில், அரவை கொப்ப ரையில் அயல் பொருள்கள் ஒரு சதவீதத்திற்கு மிகாமலும், பூஞ்சா ணம் தாக்கிய மற்றும் கருப்பு நிற கொப்பரை 10 சதவீதத்திற்கு மிகாம லும், சுருக்கம் கொண்ட கொப்பரை கள் 10 சதவீதத்திற்கு மிகாமலும், சில்லு 10 சதவீதத்திற்கு மிகாமலும், ஈரப்பதம் 6 சதவீதத்திற்கு மிகாம லும் நன்கு உலர வைத்து நியாய மான சராசரி தரங்களுடன்  இராஜ பாளையம் ஒழுங்குமுறை விற்ப னைக் கூடத்திற்கு அரவை கொப்ப ரைத் தேங்காயினை கொண்டு வந்து கிலோவுக்கு ரூ.105.90 என்ற குறைந்தபட்ச ஆதார விலையில் விற்பனை செய்து பயன்பெறலாம். மேலும், விவசாயிகளின் வங்கி கணக்கில், அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டதற்கான தொகை நேரடியாக வரவு வைக்கப் படும். விருதுநகர் மாவட்டத்தில் 30-09-2022  வரை அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்படவுள்ள நிலையில், இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் தென்னை சாகுபடி விவசாயிகள் தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் பதிவு செய்து பயன் பெறுமாறு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி  கேட்டுக் கொண்டுள்ளார். இராஜ பாளையம், திருவில்லி புத்தூர் வட்டார பகுதிகளைச் சார்ந்த  தென்னை சாகுபடி விவசாயிகள் இராஜபாளையம் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்கா ணிப்பாளரை 9952341770/ 04563-222615 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள் ளப்படுகிறது.  வத்திராயிருப்பு வட்டார தென்னை சாகுபடி விவசாயிகள்; இராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற் பார்வை யாளரை 9894622582 என்ற எண்ணிற்கும் மற்றும் வத்திரா யிருப்பு விற்பனைக்கூட மேற் பார்வையாளரை 8248325233 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் ஐந்து நாட்கள் கன மழை திருச்சூரில் திடீர் சூறாவளி

திருவனந்தபுரம், செப். 9- கேரளத்தில் அடுத்த 5 நாட்கள் கன மழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெள்ளியன்று திருச்சூர், பாலக்காடு, மலப்புறம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, சனியன்று திருச்சூர், மலப்புறம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, ஞாயிறன்று மலப்புறம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, திங்களன்று கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் அலார்ட் அறிவிக்கப்பட்டது. திருச்சூரில் திடீர் சூறாவளியால் பரவலான சேதம் ஏற்பட்டது.  திருச்சூரின் வரந்தரப்பள்ளி, நந்திப்புலம்,  அட்டப்பிள்ளி ஆகிய பகுதிகளில் சூறாவளி தாக்கியது. மரங்கள் சாய்ந்தன. மின் கம்பங்கள் உடைந்தன.  இச்சம்பவம் வெள்ளியன்று காலை 7.30 மணியளவில் நடந்துள்ளது.
 

;