இராமநாதபுரம்,அக்.14- வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அக்டோபர் 14 அன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு ஆட்சியர் கூறியதாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதையொட்டி கடந்த மாதம் நீர்வரத்து கால்வாய், குளங்கள், கண்மாய்கள் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் ஊராட்சி பகுதியில் உள்ள நீர்வரத்து கால்வாய், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றில் சீரமைக்கப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்து மழை தண்ணீர் மக்கள் வசிக்கும் இடங்களில் தேங்காமல் குளங்களுக்கு செல்வதை உறுதி செய்திட வேண்டும். சாலைகளில் திடீரென மரங்கள் சாய்ந்தால் உடனடியாக அகற்றும் வகையில் தேவையான உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். சாலைகளில் உடைப்பு ஏற்பட்டாலும் உடனடியாக சரி செய்திடும் வகையில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். பொதுப்பணித்துறையின் மூலம் ஆறுகள், குளங்கள், ஏரிகளை ஒட்டியுள்ள பள்ளி கட்டிடங்களில் தண்ணீர் தேங்காத வகையில் கண்காணித்திட வேண்டும். வைகை ஆற்றில் தண்ணீர் வரும் பொழுது விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் அலுவலர்கள் திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் தீணைப்புத்துறையினர் மழைக் காலத்தில் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள் ளும் வகையில் தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும். வடகிழக்கு பருவமழையின் போது எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணியினை திட்டமிட்டு போர்க்கால அடிப்படையில் செயல்படுத்திட வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.