மதுரை, அக்.15- வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மதுரை மாவட்டம் தயாராக உள்ளது என ஆட்சி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் கடந்த காலங்களில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளால் மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசுக்கும் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுவிட்டதா என்பதை பகிர்ந்துகொள்கின்றனர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள்.
தூர்வாரப்படாத வரத்துக் கால்வாய்கள்
தேனூரைச் சேர்ந்த விவசாயி தெய்வமணி கூறிய தாவது: மதுரை வடக்கு தாலுகாவில் தேனூர் பகுதியில் 800 ஏக்கர், சமயநல்லூர் பகுதியில் 350 ஏக்கர், திருவேட கத்தில் 500 ஏக்கர், பரவையில் சுமார் 350 ஏக்கர் விளை நிலங்கள் இந்தப் பகுதிகளில் உள்ள கண்மாய் மூலம் பல னடையும். ஆனால், இப்பகுதியில் உள்ளவரத்துக்கால் வாய்கள் முழுமையாக தூர்வாரப்படவில்லை. சோழவந்தான் அருகே சோழவந்தான்-தச்சம் பத்து-திருவேடகம்- தேனூர்-சமயநல்லூர்-பரவை பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில் தடுப்ப ணை ஒன்று கட்டப்பட்டது. தொடர்ந்து இப்பகுதியில் மணல் கொள்ளை நடைபெற்றதால் வைகையாறு பள்ளமாகிவிட்டது. வரத்துக் கால்வாய்கள் மேடாகி விட்டது. இதனால் இந்த தடுப்பணை பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது. இந்தத் தடுப்பணையை உயர்த்திக்கட்ட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மனுக் கொடுத்துவிட்டோம். பொதுப்பணித்துறையி னர் தேனூர் தடுப்பணையை உயர்த்திக் கட்டினால் தான் பருவமழை காலத்தில் கண்மாய்களுக்கு தண்ணீர் கிடைக்கும் என ஆய்வு செய்து ஒப்புக்கொண்டனர். ஆனால் இதுவரை தடுப்பணை உயர்த்திக் கட்டப்படவில்லை. இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் போது மழை நீர் சோழவந்தான் தொடங்கி பரவை வரை யுள்ள கண்மாய்களுக்கு வந்து சேராது. வழக்கம் போல் தண்ணீர் வைகையாற்றுக்குச் சென்றுவிடும். தேனூர்-கொடிமங்கலம் இடையே மாடக்குளம் பகுதிக்கு குடிதண்ணீர் கொண்டு செல்வதற்கு வசதி யாக தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்ப ணைக்கு செல்வதற்கு தேனூர் ஆற்றங்கரையோரம் சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இங்கு முறையாக தண்ணீரை கடத்துவதற்கு வசதியில்லை. மழை பெய்தால் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்றார்.
ஆழப்படாத கண்மாய்கள்
மதுரை குலமங்கலத்தைச் சேர்ந்த தனபாலன் கூறுகையில், “ பாலமேடு அருகே உள்ள சாத்தையாறு அணை தண்ணீர் மற்றும்வடகிழக்குப் பருவமழை தண்ணீர் ஆகியவை வரத்துக்கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட்டிருந்தால் குலமங்கலம், தவசிப்புதூர், வீரபாண்டி வழியாக வண்டியூர் கண்மாயைச் சென்ற டையும். கடந்த காலங்களில் வரத்துக் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததால் விவசாயம் கடுமை யாகப் பாதிக்கப்பட்டது. இது வரை வரத்துக்கால்வாய்கள் சீரமைக்கப்படவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதில் கண்மாய் கரைகள்தான் உயர்த்தப்பட்டதேயொழிய எந்தக் கண்மாயும் ஆழப்படுத்தப்படவில்லை. இந்தா ண்டும் மழையால் விவசாயம் கடுமையாக பாதிக்கத் தான் செய்யும் என்றார்.
நகர்ப்புற பாதிப்பு
மதுரையில் மழை பெய்தால் பாதிக்கப்படும் பட்டியலில் முதலில் இடம்பெறுவது ஆனையூர் பகுதி தான். ஆனையூர் -சிலையனேரி கால்வாய் கூடல்புதூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வழியாக செல்லூர் கண் மாயில் முடிவடைகிறது. மற்றொரு கால்வாய் கூடல் புதூர் பிஎஸ்என்எல் அலுவலகம் வழியாகச் செல்கிறது. சிலையனேரி வாய்க்காலில் செல்லும் மழைநீர் கரைகள் உயர்த்திக் கட்டப்படாததால் ஒவ்வொரு ஆண்டும் உடைப் பெடுக்கும். அதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். மதுரையின் ஆட்சியராக நடராஜன் இருந்தபோது சிலையனேரி வாய்க்கால் உடைப்பு ஏற்படும் பகுதி யில் கரை உயர்த்தி பலப்படுத்தப்படும் என்றார். ஆட்சியர்கள் மாறியுள்ளனர். ஆனால் பணி நடைபெற வில்லை. இந்தாண்டு மழை பெய்யும் போதும் சிலைய னேரி வாய்க்கால் தண்ணீர் கூடல்புதூர் வீட்டு வசதி வாரி யக் குடியிருப்புகளை சூழ்ந்து விடும். மக்கள் நிம்மதி யிழப்பர் என்கிறார் தொடர்ந்து இந்தப் பாதிப்பால் பழக்கப்பட்டுப்போன அரசு ஊழியர் செல்வம்.
கண்டுகொள்ளப்படாத சாத்தையாறு அணை
மதுரை மாவட்டத்தில் உள்ள அணைகளில் அலங்காநல்லுார் அருகே உள்ள சாத்தையாறு அணை யும் ஒன்று. இதன் மொத்த நீர்மட்டம் 29 அடி தான். சாத்தையாறு சிறுமலையில் தோன்றி வைகை யில் கலக்கும் துணையாறு. சிறுமலை, வகுத்துமலை, காட்டுநாயக்கன் ஓடையில் இருந்து வரும் நீர் சாத்தை யாறு அணைக்கு வருகிறது. அணை நிரம்பினால் எர்ரம்பட்டி, சின்னணம்பட்டி, கோவில்பட்டி, ஆதனுார் உட்பட 11 கண்மாய்கள் நிரம்பும். அதே நேரத்தில் இங்குள்ள தேவசேரி கண்மாய்க்கு அணை தண்ணீர் கிடைக்காது. மதுரை தொகுதி மக்களவை உறுப்பினராக பொறுப்பு வகித்து மறைந்த தோழர் பொ.மோகன் இப்பகுதியை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். அப்போது அவரிடம் தேவசேரி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும் என கூறினார். ஆனால் அவரது யோசனை அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
பத்தாண்டுகால அலட்சியம்
சாத்தையாறு அணையைத் தூர்வார வேண்டும். அணையின் மையப்பகுதியிலுள்ள கரட்டைஅகற்றி கூடுதல் நீரை தேக்க வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். கடந்த பத்தாண்டு களாக இந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை. வைகை அணையைத்தான் தூர்வார முடிய வில்லை. குறைந்தபட்சம் சாத்தையாறு அணையை யாவது அரசு தூர் வாரியிருந்தால் கூடுதலாக ஒரு மூன்று அடி தண்ணீரையாவது தேக்கியிருக்க முடியும். அதையும் செய்யவில்லை. இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை அளவுக்கதி மாக பொழிந்தால் சாத்தையாறு அணையிலிருந்து வெளி யேற்றப்படும் தண்ணீர் மதுரை செல்லூர் கண்மாய் வழியாக வைகையாற்றுக்குத்தான் செல்லும். 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரைக்கு வந்திருந்த தண்ணீர் மனிதர் என்ற புகழப்படும் நீா்மேலாண்மை நிபுணா் ராஜேந்திர சிங், விவசாயிகள் குழுவினருடன் சாத்தையாறு அணையை பார்வை யிட்டார். அப்போது அவா், சாத்தையாறு அணையில் நிரந்தரமாகத் தண்ணீரைத் தேக்குவது குறித்தும், பெரியாறு- வைகை கால்வாயை குழாய் வழியாக இந்த அணையுடன் இணைப்பது குறித்தும் விவசா யிகளிடம் கேட்டறிந்தார். இந்தத் திட்டத்தின் சாத்தியக் கூறுகள் குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து விளக்குவதாகவும் உறுதியளித்தார். வரும் காலத்திலாவது கவனத்தில் கொள்ளப்படுமா சாத்தையாறு அணை என்கின்றனர் விவசாயிகள்.
பாதாளச்சாக்கடை-குடிநீர் குழாய் இணைப்புப் பணி
தற்போது பெய்ய உள்ள வடகிழக்குப்பருவமழை மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வடக்குப்பகுதியை பதம் பார்த்துவிட்டுத்தான் போகும் என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் பி.ஜீவானந்தம். மதுரை சாந்திநகரிலிருந்து கூடல் நகர் வரை, கூடல்நகர் வானொலி நிலையம் முதல் ஆனையூர் பேருந்து நிறுத்தம் வரை, ஆனையூர் பேருந்து நிலையத்திலிருந்து எஸ்விபி நகர் சாலை, எஸ்.ஆலங்குளம், மகாத்மா காந்தி நகர் பகுதிகள் மற்றும் ஊமச்சிகுளம் சாலையில் மாநகராட்சியோடு இணைக் கப்பட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை பணிகள், குடிநீர் குழாய் இணைப்புப் பணிகள் ஏதாவது ஒரு காரணத் தால் சாலைகள் தோண்டப்படுவதும், மூடப்படுவதும் தொ டர்கிறது. மதுரையின் சாலைகள் மோசமாகஉள்ளன. அய்யர் பங்களாவில் உள்ள ஸ்ரீ நகரில் நடைபெறும் பணிகள் இன்னும் முழுமையடைவில்லை. மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மற்றொருபுறத்தில் காலிபிளாட்டுகளில் வளர்ந்து வரும் சீமைக் கருவேல மரங்களும் மக்களின் துயரத்தோடு இணைந்துள்ளது. கருவேல மரங்கள் அகற்றப்படவில்லை. காலி மனைகளில் தேங்கும் தண்ணீர் வெளியேறுவதற்கு வழியில்லை. மழை பெய்தால் பாம்புகள் படையெடுப்பு அதிகரிக்கும். வைகையின் தென்கரை சாலையிலும் கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்துள்ளன. வைகையாற்றிலும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. மழைக்கு முன் மரங்களை அப்புறப்படுத்தத் தவறினால் தண்ணீரின் வேகம் தடைபடும் என்றார். இந்தச் சூழலில் மதுரை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் பருவமழையை சந்திக்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.