மதுரை, ஏப்.7- கார்ப்பரேட் ஆதரவு, இந்துத்துவ வகுப்புவாத கூட்டணி அரசாங்க மான பாஜகவை தோற்கடிப்பது மக்க ளின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமையப்போகிறது என்று பிரகாஷ் காரத் கூறினார்.
\திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் மதுரை மக்கள வைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆத ரித்து மதுரை வடக்கு மாசி - மேல மாசி வீதி சந்திப்பு, மதுரை யா. ஒத்தக்கடை - நரசிங்கம் சாலை ஆகிய மையங்களில் சனிக்கிழமை யன்று மாலையில் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டங்களில் பங் கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சிறப் புரையாற்றினார். இதில் பிரகாஷ் காரத் பேசிய அம்சங்கள் வருமாறு:
இந்த நாடாளுமன்றத் தேர்தல் சாதாரணத் தேர்தல் அல்ல. நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல். மதச்சார்பற்ற இந்தி யாவை, ஜனநாயகத்தை, கூட்டாட்சி யை பாதுகாப்பதற்காக நடக்கின்ற தேர்தல்.
இந்துத்துவா ராஷ்டிரத்தை அமைப்பதுதான் பாஜக, ஆர்எஸ்எஸ், மோடியின் நோக்கம். இந்த இந்துத்துவா ராஷ்டிரம் என்பது ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சிதான். பல்வேறு சித்தாந்தங்கள், கொள்கை கள் உடையவர்கள் இந்தியா கூட்டணியாக ஒன்றிணைந்துள் ளோம். மிகப்பெரிய சவாலோடு தான் இந்த தேர்தலை சந்திக்கவேண்டும். தமிழகத்தில் இந்தியா கூட்டணி யை மக்கள் வெற்றிபெறச் செய்வார் கள் என்ற நம்பிக்கை உள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில் பாகுபாடு
அரசும் மதமும் ஒன்றோடொன்று கலக்கக்கூடாது. மதம் என்பது மக்களின் தனிப்பட்ட விருப்பம். அர சாங்கம் அதில் தலையிடக்கூடாது.ஆனால் பாஜக ஆளக்கூடிய மாநி லங்களான உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் உள்ளி ட்ட மாநிலங்களில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறு பான்மை மக்கள் சரிசமமாக உரிமை கள் கொண்ட குடிமக்களாக நடத்தப் படுவதில்லை. இரண்டாம்தர குடி மக்களாக பாகுபாட்டுடன் நடத்தப் படுகிறார்கள். சங்பரிவாரக் கும்பல்களால் சிறுபான்மை மக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப் படுகிறது என்பதை ஊடகங்கள் மூலம் பார்க்கிறோம். இதனை நியாயப் படுத்தும் செயலில் அவர்கள் ஈடுபடு கின்றனர். மாடுகளை கடத்தினார்கள் என்றும் பசுமாடுகளை கொன்றார்கள்; அதன் மாமி சத்தை சாப்பிட்டார்கள். கட்டாய மதமாற்றம் செய் தார்கள். அதனால்தான் சிறுபான்மை மக்களை தாக்கினோம்; கொன்றோம் என்றும் சங்பரி வாரக்கும்பல் அதனை நியாயப்படுத்துகின்றனர்.
வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தோர் திரு மணம் செய்துகொள்வதை மிகவும் கஷ்டமான செயலாக மாற்றும் வகையில் சட்டங்களை கொண்டு வருகின்றனர். ஒட்டுமொத்தத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை மக்கள் அச்சத்துடன், பதைபதைப்புடன் அன்றாட வாழ்க்கையை வாழக்கூடிய சூழல் உள்ளது.இதைத்தான் சிறப்பான பாஜக மாடல் என்று பெருமையடித்துக்கொள்கிறது. இந்த கேவல மான மாடலை இந்தியா முழுவதற்கும் கொண்டு வருவதற்கான முயற்சியை பாஜக செய்து கொண்டிருக்கிறது. இதற்காக வாக்களிக்குமாறு பாஜக கேட்கிறது; ஆட்சியதிகாரத்தை கேட்கி றார்கள்.
மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்து வது, ஒற்றுமை யாக இருக்கக்கூடிய மக்களை, மதத்தைப் பற்றி கவலைப்படாமல், கஷ்டங்களை பகிர்ந்து கொண்டு வாழக்கூடிய மக்களில் ஒரு பகுதியினரை, இன்னொரு பகுதியினருக்கு எதி ராக மதத்தைச் சொல்லி திருப்பிவிடுகிற மிக மிக ஆபத்தான வேலையை பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் செய்துகொண்டிருக்கின்றன. மற் றொரு பக்கம் பெரும்பான்மைவாதத்தை தூண்டி விடுகிறது. இந்துராஷ்டிரத்தை அமைக்கப்போகி றோம் என்று தைரியமாக, பகிரங்கமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி யொரு ராஜ்ஜி யம் வந்ததென்றால் இப்போதுள்ள அரமைப்புச் சட்டம் இருக்காது. நாம் உயர்த்திப்பிடிக்கின்ற ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி என அனைத்தும் குழிதோண்டி புதைக்கப்படும் அபா யம் உள்ளது என்ற எச்சரிக்கையுடன் இந்த நாடா ளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டியிருக்கி றது.
கொள்ளையடிக்க வசதி...
மதத்தைச் சொல்லி உழைக்கும் மக்களை சீர ழித்துக்கொண்டே, மறுபக்கம் கார்ப்பரேட்க ளுக்கும் முதலாளிகளுக்கும் ஒன்றிய பாஜக அரசு சிவப்புக்கம்பளம் விரித்து அனைத்து உதவிகளை யும் செய்துகொண்டிருக்கிறது. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவில் கோடிகோடியாக கொள்ளையடிப்பதற்கு அனைத்து வசதிகளை யும் வாய்ப்புகளையும் கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய பாஜக அரசு ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
நமது நாடு இயற்கை வளங்களில் சிறந்த நாடு. பல்வேறு மாநிலங்களில் அதிகளவில் வளங்கள் உள்ளன. இந்த வளங்களையெல்லாம் கார்ப்ப ரேட்களும் முதலாளிகளும் வகைதொகையில்லா மல் சுரண்டி, லாபம் சம்பாதிப்பதற்கான ஏற் பாட்டை பாஜக மோடி அரசு செய்து கொடுத்திருக்கி றது. இதன்விளைவு என்னவென்பதை ஒரு புள்ளி விபரத்தின் மூலம் புரிந்துகொள்ள முடியும். நாட் டின் மக்கள் தொகையில் மேல்மட்டத்தில் இருக் கக்கூடிய ஒரு சதவீதம் பேரிடம் 40 சதவீதமான வளங்கள் உள்ளன. நாட்டின் சொத்துக்கள் இந்த ஒரு சதவீதம்பேரிடம் குவிகிறது.
இப்படி வளங்களை கொடுத்து கார்ப்பரேட் டுளை வாழவைத்துக்கொண்டிருக்கும் ஒன்றிய பாஜக அரசு, நம்மைப்போன்ற மக்களுக்கு எது வும் செய்யவில்லை என்பது மட்டுமல்ல, இருப்ப தையும் பறிக்கக்கூடிய நிலைமை உள்ளது. குறிப்பாக வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறியிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை 10 ஆண்டுகால மோடி அரசு மீது நாம் வைக்க வேண்டி யதுள்ளது.
தலைவிரித்தாடும் வேலையின்மை
வேலையில்லா பட்டாளம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஆய்வறிக்கைகள் சொல்கின்றன. சமீபத்தில் ஐஎல்ஓ என்ற இந்திய தொழிலாளர் நிறுவனம், வேலைவாய்ப்பு சம்பந்த மான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.அதில் வேலையில்லாமல் அவதிப்படக்கூடிய படித்த இளைஞர்கள் 83 சதவீதமான பேர் உள்ளனர். இதில் 61 சதவீதம் பேர் உயர்கல்வி படித்தவர்கள். ஆட்சிக்கு வரும் போது, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்று மோடி கூறி னார். ஆனால் 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் வேலையின்மை தலைவிரித்தாடும் நிலைமை உள்ளது. ஒரு சில லட்சம் வேலைவாய்ப்புகளைக் கூட மோடி அரசு உருவாக்கவில்லை.
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், இதர உழைப்பாளிகள், முறைசாரா தொழிலா ளர்கள் ஆகியோரின் உண்மைச் சம்பளம் குறைந்துகொண்டே வருகிறது. விலைவாசி அதிகரித்துக்கொண்டே வருகிறது.இதுதான் மோடி அரசின் சாதனையாக உள்ளது.மீண்டும் 5 ஆண்டுகாலம் இவற்றையெல்லாம் செய்வ தற்கு, நம்மை சிதைப்பதற்கு அனுமதிக்கப்போகி றோமா என்பதுதான் கேள்வி.
பறிக்கப்படும் மாநில உரிமைகள்
மாநிலங்களின் உரிமைகளை மோடி அரசு பறிக்கிறது. மாநிலங்களின் உரிமைகளைத்தானே பறிக்கிறார்கள், தனிப்பட்ட முறையில் நமக்கென்ன என்று மக்கள் நினைக்கக்கூடாது. மாநிலங்கள் இணைந்த ஒன்றியம் தான் இந்தியா என்று அரசமைப்புச்சட்டம் சொல்கிறது. தமிழ கத்தில் முந்தைய காலத்தில் மத்திய அரசு என்று சொல்லிக்கொண்டிருந்தோம்.இப்போது ஒன்றிய அரசு என்று சொல்கிறோம். மாநிலங்களால் ஒன்றி ணைக்கப்பட்டதுதான் இந்தியா என்று ஒன்றிய அரசுக்கு நாம் சொல்லி நினைவுபடுத்த வேண்டி யிருக்கிறது.
மாநிலத்தில் உள்ள மக்களுக்கு முதன்மை யாக அவர்களுடைய நலன்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுக்குத்தான் உள்ளது.ஆனால் பாஜகவும் பிரதமர் மோடியும் என்ன செய்கிறார்கள் என்றால், அந்தந்த மாநில அரசுகள் அங்குள்ள மக்களுக்கு நல்ல திட்டங் களை செய்துகொடுத்துவிடக்கூடாது; நல்ல பெயர் வாங்கிவிடக்கூடாது என்பதற்காக அந்த மாநி லங்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறார்கள்.எனவே மாநில உரிமைகள் பறிக்கப்படுவது என் பது, அந்தந்த மாநிலங்களில் உள்ள மக்களின் நலன்களுக்கு எதிரானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசு
தமிழகத்தை மோடி அரசு தொடர்ந்து வஞ்சித்தது. தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை.நிலுவையில் உள்ள நிதியைக்கூட ,தொடர்ந்து அழுத்தம்கொடுத்த பிறகே சிறிதளவு தருவார்கள். சமீபத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட பேரிடர், தென்தமிழகத்தில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இதற்காக மாநில அரசு கோரிய நிவாரணத்தொகையை பாஜக அரசு கொடுத்ததா? தமிழ்,தமிழர்கள் மீது பாசம் வைத்துள்ளதாகப் பேசும் மோடி அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் தமிழக மக்களை வஞ்சித்தார்கள்.
தமிழகத்தை பாஜக அரசு எப்படி வஞ்சித்துள் ளது என்பதற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாதது மற்றொரு உதாரணம்.பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவ மனையை கட்டி பயன்பாட்டிற்கு கொண்டுவந்து விட்டார்கள்.ஆனால் மதுரை எய்ம்ஸ் இடத்தில் வெறும் ஒத்த செங்கல்லை மட்டுமே வைத்து விட்டு, தமிழ்நாட்டை பிரதமர் மோடியும் பாஜக வினரும் சுற்றிசுற்றி வந்துகொண்டிருக்கிறார்கள்.தமிழக மக்களை ஏமாளிகளாக பாஜக ஆட்சி யாளர்கள் நினைக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்ப வேண்டும்.
மாநில உரிமைகளை பாதுகாக்க
மாநில மொழிகளை பின்னுக்குத்தள்ளி இந்தி மொழியை திணிக்கிறார்கள். கல்வியில் வெவ் வேறு கொள்கைகளை கொண்டுவந்து, நீட் தேர்வை திணித்து நமது பிள்ளைகளின் உயர்கல்வி கனவை சிதைக்கிறார்கள்.
அடிப்படையில் பாஜக நினைப்பது என்ன வென்றால், வெவ்வேறு மாநிலங்கள் இருக்கக் கூடாது; வெவ்வேறு மொழிகள் இருக்கக்கூடாது; வெவ்வேறு கலாச்சாரங்கள் இருக்கக்கூடாது என்பதுதான்.அதனால்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒரே நாடு,ஒரே மொழி,ஒரே கலாச்சாரம் என்பதை முன்வைக்கிறது. மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிர்திசையில் பயணிப்பதுதான் பாஜக,மோடி,ஆர்எஸ்எஸ்ஸின் நோக்கம்.சமீபத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை முன்வைக்கிறார்கள். எனவே மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டால்தான் அந்த மாநில மக்களின் நலன்களும் உரிமைகளும் பாது காக்கப்படும்.மாநில உரிமைகளுக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தேவை இருக்கிறது.அந்த நோக்கத்துடன்தான் பல்வேறு அரசியல்,சித்தாந்தங்களை கொண்ட வர்கள் இணைந்து இந்தியா கூட்டணியை அமைத் துள்ளோம்.இந்தியா முழுவதும் தமிழகத்திலும் பாஜகவை தோல்வியுறச் செய்வதற்கு மக்களு டைய பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
மதுரை மக்களவைத்தொகுதியில் சு.வெங்க டேசன் ஏற்கெனவே எம்.பி.யாக இருந்து சிறப்பாக செயல்பட்டுள்ளார்.மதுரை மக்களின் நலனுக் கான, தமிழக மக்களின் நலனுக்காக நாடாளு மன்றத்தில் முழங்கியிருக்கிறார். ஜனநாய கம்,மதச்சார்பின்மை, கூட்டாட்சியை பாது காக்கும் குரலாக சு.வெங்கடேசன் மீண்டும் ஒலிப் பார். எனவே அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து சு.வெங்கடேசனை கடந்த தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.நிச்ச யமாக தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்.அதில் மதுரை சாதனை படைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவரது ஆங்கில உரையை கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தமிழாக்கம் செய் தார்.