districts

மின்கம்பம் நடுவதில் ரவுடிகள் தலையீடு: ஊராட்சி தலைவர் ராஜன் மீது தாக்குதல்

அருமனை, டிச.19- பனச்சமூட்டில் மின்கம்பம் நடுவதில் இடையூறு ஏற்படுத்திய ரவுடிகள் மாங்கோடு ஊராட்சித் தலைவர் ராஜன் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு எதிராக திரண்ட பொதுமக்கள் மீது அருமனை காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இதற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ரவுடிகள் மற்றும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ளது மாங்கோடு ஊராட்சி.  இந்த ஊராட்சியின் தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த  ராஜன் உள்ளார். கேரள தமிழ்நாடு எல்லையில் உள்ள பனச்சமூடு-பாறசாலை சாலை கேரளா அரசால் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த சாலையின் கிழக்குப் பகுதி தமிழ்நாடு எல்லையில் உள்ளது. சாலை அகலப்படுத்துவதையொட்டி சாலையில் நிறுத்தபட்டிருந்த மின் கம்பங்கைளை மாற்றி நடும் பணியை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டு வருகிறது.   பனச்சமூடு சந்திப்பில் குளப்பாறை திரும்பும் இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் ஒன்று உள்ளது.  இந்த மின்கம்பத்தை மாற்றி போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் நடுமாறு மாங்கோடு ஊராட்சித் தலைவர் ராஜன் கூறியுள்ளார்.

இதற்கு மின்வாரிய ஊழியர்கள் உடன்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து இந்த மின்கம்பம் அருகில் பூக்டை நடத்தி வரும் அனி (எ) சந்தோஷ், அவருடைய நண்பர் வெள்ளறடை பகுதியில் மொபைல் கடை நடத்தி வரும் சுனில், விபின், விஜு ஆகிய நான்கு பேரும் ஊராட்சி தலைவர் ராஜனை பின்னால் வந்து மறைத்து வைத்திருந்த உருட்டு கட்டையால் தலையிலும் உடம்பிலும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.   இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ராஜன் தரையில் விழுந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிசைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ஊராட்சிமன்ற தலைவர் தாக்கப்பட்டதை அறிந்ததும் திரண்டு வந்த பொதுமக்கள் மீது அருமனை காவல்துறையினர் தடியடி நடத்தினர். சிபிஎம் கண்டனம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி வலியுறுத்தியுள்ளார். பொதுமக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர் சம்மந்தப்பட்ட ரவுடிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தடியடி நடத்த காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

;