districts

img

குமரி மாவட்டம் முழுவதும் கன மழை: நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம்: ஆட்சியர்

நாகர்கோவில், மே 16- கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பேச்சிப்பாறை, திற்பரப்பு, பெருஞ்சாணி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மட்டுமல்லாது கன்னியாகுமரி, கொட்டாரம், நாகர்கோவில், வெள்ளமடம், ஆரல்வாய் மொழி, தோவாளை உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. சில இடங்களில்  இடி-மின்னலுடன் கூடிய மழையும் பெய்தது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் மே 16 முதல் கன மழை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வியாழனன்று காலை முதல் மேக மூட்டம் காணப்பட்டது. பிற்பகல் கனமழை தொ டங்கியது. இதன் காரணமாகச் சாலைகளின் இரு புறங்களிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், நாகர்கோவில் அப்டா மார்க் கெட்டில் இருந்து வடசேரி செல்லும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். கோடை வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளிர்ச்சி நிலவ தொடங்கியுள்ளது. மலையோர பகுதிகள், நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வருகின்ற மழையால் பேச்சிப்பாறை அணைக்கு தண்ணீர்  தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதனால் அணை நீர் மட்டம் 45 அடியை எட்டி வருகிறது. பேச்சிப் பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில் அணையில் இருந்து எந்த நேரத்திலும் மறுகால் வழியாக தண்ணீர் திறந்து விடப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  சாலையில் மரம் முறிந்து விழுந்தது மார்த்தாண்டம் குலசேகரம் நெடுஞ்சாலை யில் கீழ் பம்மம் பேருந்து நிறுத்தம் அருகா மையில் சாலை ஓரம் இருந்த மரம் வியாழ னன்று மாலை சாலையின் குறுக்காக சரிந்தது. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு  கனமழையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் விடுத்துள்ள முன்னெச்சரிக்கை யில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.05. 2024 முதல் 19.05.2024 வரை கனமழை எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே  அனைத்து தாசில்தார்களும் இந்த கனமழை எச்சரிக்கையை கருத்தில் கொண்டு தங்களது தாலுகாக்களில் உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படாத வண்ணம் ஆற்றின் தாழ்வான பகுதி களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க தெரிவிக்க வேண்டும். முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டும். தங்கள் தாலுகாக்களில் அசம்பா விதங்கள் நிகழ்ந்தால் உடனடியாக காலம் தாழ்த்தாமல் மாவட்ட  கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவிக்கவும். அனைத்து தாசில்தார்க ளுக்கும் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். மின் சாதனங்களை கவனமுடன் கையாளவும். மேலும் மழை நேரங்களில் மரங்கள், மின் கம்பங்கள், நீர்நிலைகள் அருகில் செல்ல வேண்டாம், மழைகாலங்களில் நீர் நிலைகளில் நீரின் வரத்து அதிகமாக வர வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் நீர் நிலைகளில் குளிக்க செல்ல வேண்டாம். கடலில் சீற்றம் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மாவட்டத்தில் மே 16 வியாழக்கிழமை காலை நிலவரப்படி அதிகபட்சமாக தக்கலை பகுதியில் 34 மி.மீ மழை பெய்திருந்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.91 அடியாக உள்ளது. அணைக்கு 196 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. பெருஞ்சாணி நீர்மட்டம் 47 அடியாக உள்ளது. அணைக்கு 91 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. 21 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. சிற்றார்- 1 இல் 9.94 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 77 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. சிற்றார்- 2 இல் - 10.04 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 115 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. பொய்கையில் 15.5 அடியாக நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர் மட்டம் 14.35 அடியாகும். முக்கடல் அணையின் நீர்மட்டம் 0.2 அடியாக உள்ளது. குளிக்க தடை  கடந்த சில நாட்களாக  பெய்து வரும் கோடை மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் திடீர் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளம் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

;