திருவில்லிபுத்தூர், ஜூலை 8- துப்புரவுப்பணியை சரிவர மேற்கொள்ளாத தனியார் நிறுவனத்தால் திருவில்லிபுத்தூரில் குப்பைகள் குவிந்துகிடக்கின்றன. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நகராட்சியில் துப்புரவுப்பணிக்கான டெண்டரை அவுட்சோர்சிங் முறையில் ராமன் அண்ட் கோ என்கிற நிறுவனம் எடுத்துள்ளது. விதிமுறைப்படி 158 பணியாளர்களைக் கொண்டு 33 வார்டுகளிலும் குப்பைகளை வீடு வீடாக தரம் பிரித்து வாங்க வேண்டும். ஆனால் ராமன் அண்ட் கோ நிறுவனம் 40 முதல் 50 நபர்களைக் கொண்டு பெயரளவிற்கு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் எக்ஸ்னோரா நிறுவனம் பணிகளை தொடர்ந்து செய்து வந்தது. தற்போது போதிய அளவிற்கு டெண்டர் நிறுவனப் பணியாளர்கள் இல்லாததால் தெருக்களில் குப்பைகள் குவிந்துக்கிடக்கின்றன. கடந்த ஐந்து நாட்களாக கீழ ரத வீதி, சப் ரிஜிஸ்டர் அலுவலகம், தேவர் சிலை உட்பட பல வார்டுகளில் குப்பைகள் குவிந்துக்கிடக்கின்றன. நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தெளிவான முடிவை எடுக்க வேண்டும்.குப்பைகளை உடனே அகற்ற வேண்டும். இல்லையெனில் குப்பைகளால் சுகாதாரச்சீர்கேடு ஏற்படும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.