ஒட்டன்சத்திரம், ஜூலை 17- ஒட்டன்சத்திரம் அருகே சாலையில் திடீரென ஏற்பட்ட விரிசலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து இடை யக்கோட்டை அருகே உள்ள சின்னக்காம்பட்டி, மாம்பாறை, அய்யம் பாளையம் வழியாக மார்க்கம்பட்டி வரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் செலவில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஏற்கனவே இருந்த தார்ச்சாலையை அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டது. இந்நிலையில் சின்னக்காம்பட்டியை அடுத்து சாலையின் நடுவே இரண்டு இடங்களில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாலை யில் ஏற்பட்ட விரிசல் தெரியாமல் கீழே விழுந்து காயமடைகின்றனர. இந்த சாலையின் வழியாக ஒட்டன்சத்திரத்தில் இருந்து மார்க்கம்பட்டிக்கு மற்றும் திருப்பூர் மாவட்டம் முத்தூர், மூலனூர், தாராபுரம் மற்றும் கரூர் ஆகிய ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.