districts

மதுரை முக்கிய செய்திகள்

பழனி வாணிபக்கழக கிடங்கில் 70 டன் அரிசி மூட்டைகள் மாயம்  5 பேர் பணியிடை நீக்கம்

 பழனி,செப்.14- பழனியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்கில் 70 டன் அரிசி மூட்டைகள் காணாமல் போனது.  அதிர்ச்சியான இந்த திருட்டுச்சம்பவத்தை தொடர்ந்து கிடங்கு பொறுப்பாளர் தர்மராஜ், உதவி பொறுப்பாளர் ஜெய்சங்கர், இளநிலை உதவியாளர் ரங்கசாமி. பட்டியல் எழுத்தர் ஆறுமுகம், உலகநாதன்  ஆகிய 5 பேரை   பணி யிடை நீக்கம் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப  கழகத்தின் திண்டுக்கல் மண்டல மேலாளர் உத்தர விட்டுள்ளார். இந்த வாணிபங்கிடங்கில் இருந்து. சிமிண்ட், உரம் மற்றும் நியாய விலை கடைக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உட்பட பொருட்கள்  அனுப்பப் படும்.கடந்த  வாரம் தழிழ்நாடு வாணிப கழகத்தின் மதுரை மண்டல அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்ட னர். அப்போது 70 டன் அரிசி மூட்டைகள் குறைவாக உள்ளதை அறிந்து திண்டுக்கல் மண்டல மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் கைது 

சிவகங்கை. செப்.14- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சிதம்பரநாத புரம் தெருவில் தாரகராமன் என்பவர் மருத்துவப்படிப்பு படிக்காமல் கிளினிக் நடத்தி மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.  இதே போன்று காரைக்குடி அருகே அமராவதி புதூரில் பிளஸ்-2 படித்தவர் மருத்துவ சிகிச்சை அளித்து வந்தவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.மருத்துவத்துறை இணை இயக்குநர் மரு.இளங்கோ மகேஷ்வரன் தலைமையிலான மருத்துவக்குழு திடீர் ஆய்வின்போது இருவரையும் கண்டுபிடித்து, நட வடிக்கை எடுத்தனர். 

கணவர் இறந்த 30 ஆவது நாளில் மனைவி, மகன் தற்கொலை 

சாத்தூர்.செப்,14- சாத்தூரில் கணவர் இறந்த துக்கம் தாங்க முடியா மல் மனைவி, மகன் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். சாத்தூரைச்  சேர்ந்தவர் சிதம்பரம்.  தனியார் வங்கி யில் பணிபுரிந்து ஓய்வு பெற்று இவர் கடந்த மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மனைவி சுபா (55), மகன் முரளி பாரதி மற்றும் இரண்டு மகள்கள் உள்ள னர். மகள்களுக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். மகன் படித்து முடித்து வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் சிதம்பரம் உயிரிழந்த துக்கத்தில் கடந்த ஒரு மாத காலமாக தாய் மற்றும் மகன்  மிகவும் சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.   கணவரின்  30வது நாள்  நினைவு தினத்தை  அனுசரித்து விட்டு துக்கம் தாங்க முடியாமல் சுபா மற்றும் மகன் முரளி பாரதி  ஆகிய இருவரும் விஷம் அறிந்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து சாத்தூர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.   தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என தனித் தனியே எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

காலமானார்

மதுரை, செப்.14- மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மதுரை மாவட்டத் தலைவர்களில் ஒருவரான பாக்யா தேவர் செவ்வாயன்று  காலமானார். அவரது மறைவுச் செய்தி அறிந்து புத னன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணே சன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜய ராஜன் மற்றும் கட்சியினர் அவனியாபுரம் இல்லத்தில் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

பள்ளிக்கு பேருந்தில் செல்லும் போது அருந்ததிய மாணவிகளுக்கு தொல்லை தடுத்து நிறுத்தக் கோரி  தேனி ஆட்சியருக்கு மனு

தேனி ,செப்.14- போடி அருகே பள்ளிக்கு பேருந்தில் செல்லும் போது அருந்ததிய மாணவிகளுக்கு வேறு சாதி மாணவர்கள் தொல்லை கொடுப்பதாகவும் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழ்புலிகள் கட்சியினர் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் . தமிழ்புலிகள் கட்சியின் தேனி மேற்கு மாவட்ட செய லாளர் சு.வைரமுத்து என்ற முகமது அலி ஜின்னா தலைமை யில் மாணவ - மாணவிகள் ,பெற்றோர் தேனி ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்ததாவது: டொம்புச்சேரி பட்டாளம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 20க்கும் மேற்பட்டவர்கள் போடியில் உள்ள  அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.  சின்னமனூரில் இருந்து போடிக்கு தினமும் காலை 7:30 மணிக்கு சென்று வருகின்ற அரசுப் பேருந்தில் கடந்த சில தினங்களாக   அருந்ததியர் மாணவ மாணவி களை பெருமாள் கவுண்டன்பட்டியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பேப்பர்கள் ,சாக்பீஸ் கொண்டு எறிவது மற்றும் அருவருக்கத்தக்க வகையில் வார்த்தைகளை பேசுவது  போன்ற ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடு பட்டதோடு பாலியல் ரீதியான துன்புறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க  உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

ஆண்டிபட்டி அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

தேனி ,செப்.14- ஆண்டிபட்டி அருகே தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி யிடம் மர்ம நபர் நகை பறித்து விட்டு சென்ற சம்பவம் குறித்து ராஜதானி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள் . தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பிச்சம் பட்டியை சேர்ந்தவர் வீரணத்தேவர் மனைவி மாயக்காள். (72).சம்பவ தினத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்த போது அடையாளம் தெரியாத நபர் , அவர் அணிந்தி ருந்த 5 பவுன் நகையை பறித்து சென்றதாக தெரிகிறது.  இது குறித்து மாயக்காள் ராஜதானி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வுக்கு  கால அவகாசம் வழங்குக!  ஆயக்குடி மரத்தடி மையம் கோரிக்கை 

பழனி,செப்.14- தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று பழனி ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பயிற்சிமையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக கல்வித்துறை தமிழ் பயிலும் அரசு  மற்றும் தனியார் பள்ளி மாணவ,மாணவிகளை ஊக்கப் படுத்தும்விதமாக இந்த கல்வியாண்டு 2022 முதல் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வினை அறிமுகப் படுத்தி உள்ளது.இந்த தேர்வினை தற்போது 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுத தகுதி. இந்த தேர்வில் வெற்றி பெறும் அரசு,தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 1500 பேருக்கு பிளஸ்-2 முடிக்கும் வரை மாதம் மாதம் ரூ்.1500 வழங்கப்படும்..இந்த தேர்வுக்கு கடந்த ஆகஸ்ட்22 முதல் செப்டம்பர் 9 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கான எழுத்து தேர்வு அக்டோபர் 1 அன்று நடக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...ஆனால் இந்த தேர்வுக்கு 20 நாட்களில் தயாராவது கடினமே.அதுமட்டுமின்றி செப்டம்பரில் பள்ளிகளில்  காலாண்டு தேர்வு நடத்தப்படுகிறது.தமிழ் திறனாய்வு தேர்வுக்கு கால அவகாசம் வழங்க பரிசீலனை செய்ய வேண்டும்..இந்த தேர்வினை நவம்பர் முதல் வாரத்தில் நடத்த முன் வர வேண்டும். அதுமட்டுமின்றி உதவித்தொகை பெறுவோர் எண்ணிக்கையை குறைந்த பட்சம்  1500 லிருந்து 2000 வரை உயர்த்த முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

மாநில போட்டிகளில் பரிசுகளை வென்ற மாணவர்களுக்கு வட்டாட்சியர் பாராட்டு 

சிவகங்கை,செப்.14- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றதற்கான சான்றி தழ்களை தேவகோட்டை வட்டாட்சியர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம் சார்பில் பள்ளியின் நூற்றாண்டு விழாவினை முன் னிட்டு தமிழகம் முழுவதும்  இணையத்தின் வழியாக பேச்சுப் போட்டி மற்றும் ஒப்புவித்தல் போட்டிகள் நடை பெற்றது. இதில் இப்பள்ளி மாணவர்கள் ஐந்து பேர் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கும்,பங்கேற்ற மாணவர்களுக்கும் தேவகோட்டை வட்டாட்சியர் செல்வராணி தலைமை தாங்கி பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

பள்ளியில் காலை உணவு திட்டம்: மதுரையில் இன்று முதல்வர் துவக்கி வைக்கிறார்

மதுரை, செப் 14-  பள்ளிக்குழந்தைக ளுக்கு  காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.  மதுரை மற்றும் விருதுநகரில் செப்டம்பர் 15 அன்று பல்வேறு அரசு நலத்திட்டங்களை துவக்கி வைத்தும் தமிழக முன்னாள் முதல்வர்  பேரறிஞர் அண்ணாவின்  114 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை ஏ. வி. மேம்பாலம் நெல்பேட்டை அருகில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். நெல்பேட்டை அருகில் உள்ள மதுரை மாநகராட்சி ஆதிமூலம் தொடக்கப்பள்ளியில். பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்திற்கான நவீன சமையல் கூடத்தை பார்வையிட்டு, உணவு விநியோகத்திற்கான வாகனங்களை தொடங்கி வைக்கிறார். குழந்தைகளுக்கு உணவு பரிமாறி குழந்தைகளுடன் முதல்வர் உணவருந்து கின்றார்.

 

 

 

;