districts

40 தமிழக பேருந்துகள் இயக்கம் கேரளாவுக்கு 21 மாதங்களுக்கு பிறகு பேருந்து போக்குவரத்து தொடங்கியது

நாகர்கோவில், டிச. 1- தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு பேருந்து போக்குவரத்து 21 மாதங்களுக்கு பின்பு புதனன்று (டிச.1) காலை முதல் தொடங்கியது. கொரோனா பெருந்தொற்று பரவலை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்படி தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அரசு பேருந்து போக்குவரத்து நடைபெற வில்லை. கொரோனா பரவல் குறைந்த பிறகு தமிழகத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கியது. ஆனால் கேரளாவில் கொரோனா தாக்கம் குறையாததால் அந்த மாநிலத்திற்கு மட்டும் போக்குவரத்து நடக்கவில்லை. பிற மாநிலங்களுக்கு போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில் கேரளாவுக்கும் போக்குவரத்து தொடங்க அனுமதிக்க வேண்டும் என்றும் என கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க.  ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். கேரள அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக முதல்வர், கேரளாவுக்கு பேருந்து போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கினார். அதன்படி தமிழ கத்தில் இருந்து புதனன்று காலை முதல் கேரளாவுக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கியது. சுமார் 21 மாதங்களுக்கு பிறகு கேரளாவுக்கு தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக பேருந்து புறப்பட்டு சென்றது.

செவ்வாயன்று வரை கேரளாவில் இருந்து வந்த பேருந்துகள் குமரி மாவட்ட எல்லையான இஞ்சி விளையில் நிறுத்தப்பட்டன. இதுபோல இங்கிருந்து சென்ற பேருந்துகள் களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டன. புதன்கிழமை காலை முதல் 40 தமிழக  பேருந்துகள் திருவனந்த புரம், கொல்லம், திருச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்பட்டன. இதுபோல கேரளாவில் இருந்து மார்த்தாண்டம், நாகர்கோவில், கன்னியா குமரிக்கு 25 பேருந்துகள் இயக்கப்பட்டன. நாகர்கோவில் வடசேரி பேருந்து  நிலையத்தில் புதனன்று அதிகாலையி லேயே கேரள பேருந்துகள் பயணிகளை ஏற்றிச் செல்ல தயார் நிலையில் நின்றன. இதுபோல தமிழக அரசு பேருந்துகளும் புறப்பட தயாராக நிறுத்தப்பட்டிருந்தன. போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறு கையில், கேரளாவின் உட்புற நகரங்களுக்கு வழக்கமான பேருந்து போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என தெரிவித்தனர்.

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளா வுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளுக்கும், அலுவலக பணிகளுக்காகவும் சென்று வருகிறார்கள். மேலும் தோட்ட வேலைக்கும், கட்டிட பணிக்கும் தொழிலாளிகள் கேரளாவுக்கு செல்கிறார்கள். பேருந்து போக்குவரத்து நடைபெறாததால் குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.  போக்குவரத்து தொடங்கியதால் இனி சரியான நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியும் என இரு மாநில பேருந்துகளிலும் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்த னர். பேருந்துகளில் பயணம் செய்யும் பயணி கள் அனைவரும் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.