districts

துப்பாக்கியுடன் வங்கிக்குள் புகுந்த சாமியார் கைது

குடவாசல், செப்.20 - மஞ்சக்குடியில் அமைந்துள்ள தனியார் வங்கிக்குள் துப்பாக்கியுடன் புகுந்து மிரட்டல் விட்ட மூலங்குடி திருமலை சாமியாரை காவல்துறை கைது செய்தது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மூலங்குடி கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு இடி மின்னல் என்ற பெயரில் அமைப்பு ஆரம்பித்து, அதன் அமைப்பாளராக செயல்பட்டு வருகிறார் திருமலை (50) என்பவர். இவர் திங்கள்கிழமை மாலை மூலங்குடியில் உள்ள தனியார் வங்கி கிளைக்கு துப்பாக்கியுடன் சென்று அதிரடியாக வங்கிக் கதவை மூடி, அங்கு உள்ள அலுவலரிடம் ‘எனது மகளுக்கு ஏன் கல்விக் கடன் தர மறுக்கிறீர்கள்’ என கூறி துப்பாக்கிய காட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.  மேலும் இந்த காட்சிகளை அவரின் சமூக வலைதளத்தில் (பேஸ்புக்) பதிவிட்டுள்ளார். இதையடுத்து வங்கி கிளை மேலாளர் முத்துசாமி கொடுத்த புகார் அடிப்படையில், திங்கள்கிழமை மாலை மூலங்குடியில் உள்ள திருமலை சாமியாரின் வீட்டிற்கு, நன்னிலம் டிஎஸ்பி இலக்கியா தலைமையில், குடவாசல் காவல் ஆய்வாளர் கருணாநிதி மற்றும் காவலர்கள் சென்று அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், தனது மனைவி அனுசியாவை சட்டமன்ற  சுயேச்சை வேட்பாளராக நிறுத்தி, நன்னிலம் சட்டமன்ற தேர்தலில் குறைந்த வாக்குகள் வாங்கி தோல்வியை தழுவினார். மேலும் வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில், தனது இடி மின்னல் சங்கம் சார்பாக தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதியிலும் தனது ஆதரவாளர்களை நிறுத்த போவதாக மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், இச்சம்பவம் நடைபெற்று உள்ளது. இவருக்கு திண்டுக்கல் மற்றும் மதுரை பகுதிகளில் ஆசிரமம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. தனது அமைப்பு பிரச்சாரத்துக்கு பயன்படுத்தும் வகையில், 10-க்கும் மேற்பட்ட மகேந்திரா ஜீப் வாகனங்கள் உள்ளது. மேலும் பல லட்சங்களை தனது அமைப்புக்கு செலவு செய்யும் நிலையில் உள்ள இவர், வெளிநாட்டில் மருத்துவம் படிக்க தனது மகளுக்கு கல்விக் கடன் கேட்டு வங்கியில் தகராறில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

;