திருவாரூர், ஜூன் 2- திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மன்னார்குடியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மகாத்மா காந்தி நோபல் பரிசு பெற்ற ஐன்ஸ்டீன், டால்ஸ்டாய் போன்ற அறிஞர்களோடு கடிதத் தொடர்பு வைத்திருந்தார். மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்றவர்கள் தனது வழிகாட்டியாக காந்தியை குறிப்பிடுகிறார்கள்.
1947-ல் மகாத்மா காந்தி லண்டன் சென்ற போதும், பாரீஸ் சென்றபோதும் கட்டுக்கடங்காத மக்கள், மகாத்மா காந்தியை பார்ப்பதற்காக திரண்டனர். 1948 இல் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், ஐ.நா. சபையின் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு, உலகத் தலைவர்கள் ஒன்று கூடி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றினர். இத்தகைய உலகம் அறிந்த தலைவர் என்பதாலேயே, ரிச்சர்டு அட்டன் பிரபு காந்தியை பற்றி திரைப்படம் எடுத்தார். ஆனால் பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ் மனப்பான்மையோடு மகாத்மா காந்தியை சிறுமைப்படுத்தி, திரைப்படம் வெளி வந்ததற்கு பிறகுதான் மகாத்மா காந்தியைப் பற்றி உலகம் அறிந்தது எனக் கூறியுள்ளார். வட மாநிலங்களிலும், ஒடிசா தேர்தல் பிரச்சாரத்தின் போதும் ஏற்பட்ட தோல்வி பயத்தால் பதற்றமடைந்து, காந்தியைப் பற்றி குறைத்து மதிப்பிட்டு பேசினார்.
முகவர்கள் கவனத்திற்கு
தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. இருந்த போதிலும், இந்த தேர்தலை பொறுத்தவரை இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். வாக்கு எண்ணிக்கையின் போது எந்த ஒரு தவறும் நடக்கக் கூடாது என்பதில் இந்தியா கூட்டணி முழு கவனமாக உள்ளது. அதற்காக வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அதற்கான முகவர்கள், அங்கிருந்து கலைந்து சென்று விடக்கூடாது என அந்தந்த மாநிலத்தில் இந்தியா கூட்டணிக்கு தலைமை வைக்கிற ஏற்றுள்ள மூலம் அனைத்துக் கட்சி முகவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பின் போது சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மன்னார்குடி நகரச் செயலாளர் தாயுமானவன், ஒன்றியச் செயலாளர் ஜெயபால் ஆகியோர் உடனிருந்தனர்.