districts

img

நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு 10 ஆண்டாகியும் இழப்பீடு இல்லை

திருவள்ளூர், டிச. 23 - சென்னை - திருப்பதி இடையிலான தேசிய நெடுஞ்சாலைக்காக- தங்களின் நிலத்தை வழங்கிய விவசாயிகளுக்கு 10 ஆண்டுகளாகியும் உரிய இழப்பீடு வழங் கப்படாததைக் கண்டித்தும், இழப்பீட்டை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் திரு வள்ளூரை அடுத்த பட்டறைபெருமந்தூர் சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இந்த ஜனநாயக வழியிலான போராட்டத்தை, 500 மீட்டருக்கு முன்ன தாகவே அராஜகமான முறையில் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், 36 பெண்கள் உட்பட 150-க்கும் மேற்பட்ட வர்களை கைது செய்தனர். குறிப்பாக, விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலை வர் பெ.சண்முகத்தை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.

தொடர் போராட்டம்

சென்னை - திருப்பதி இடையே தேசிய நெடுஞ்சாலை (என்எச்-205) அமைக்க நிலங்களை வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை மாவட்ட ஆட்சியர் பெற்றுத்தர வேண்டும், 10 ஆண்டுகளாக அலைகழிக்கப்படும் விவசாயிகளுக்கு கால தாமதம் செய்யாமல் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும், 2013 நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறு குடியமர்வு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் போராடி வருகின்றனர்.

நடவடிக்கை இல்லை

கடந்த அக்டோபர் 18 அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர். நவம்பர் 6 அன்று திருத்தணியில் விவசாயிகள் பாதுகாப்பு மாநாட்டையும் நடத்தினர். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், திருவள்ளூரை அடுத்த பட்டறைபெருமந்தூரில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

கைது மிரட்டல்

அதன்படி திங்களன்று (டிச.23) காலை 10 மணி அளவில் சுங்கச்சாவடிக்கு அரை கி.மீ. தூரத்தில் விவசாயிகள் திரண்டனர். ஆனால், அதற்கு முன்னதாகவே அங்கு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இவர்கள், சுங்கச்சாவடியை நோக்கி ஊர்வலமாக புறப்பட்ட விவசாயிகளிடம், ‘முற்றுகைப் போராட்டத்திற்கு அனுமதியில்லை’ என்றும்; ‘ஒரு அடி நகர்ந்தால் கூட கைதுசெய்யப்படுவீர்கள்’ என்று மிரட்டினர். இந்த மிரட்டலுக்கு அஞ்சாமல் விவசாயிகள் முன்னேற முயன்ற போது அவர்களிடம் பலப்பிரயோகத்தில் ஈடுபட்டு கைது நடவடிக்கையில் இறங்கினர். 

பலப்பிரயோகம்

குறிப்பாக, விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்பதை கூட பொருட்படுத்தா மல் பெ. சண்முகத்தை, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தமிழரசன் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றினார். இதனால் தலைவர் களுக்கும், காவல்துறையினருக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி. துளசிநாராயணன், மாவட்டச் செயலாளர் ஜி. சம்பத், மாவட்டப் பொருளாளர் சி. பெருமாள், மாவட்ட துணைச்  செயலாளர் ஆர்.  தமிழரசு, மாவட்ட துணைத் தலைவர்கள்- ஒன்றிய கவுன்சிலர் பி. ரவி, ஏ. அப்சல் அகமது, மாவட்டக்குழு உறுப்பினர்கள்- ஒன்றிய கவுன்சிலர் எம். ரவிக்குமார், என். ஸ்ரீநாத், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் அ.து. கோதண்டன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால் மற்றும் 36 பெண்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட நிர்வாகத்திற்கு பெ. சண்முகம் கண்டனம் 

போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  “ஏற்கெனவே  இரண்டு மாதங்களுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப் பட்டது. அப்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கருடன் ஒரு விரிவான பேச்சுவார்த்தை யும் நடத்தப்பட்டது. அதில், 2013 நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறு குடியமர்வு சட்டப்படி இழப்பீடு பெற்றுத் தருவோம்; அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்ற உறுதி மொழியை மாவட்ட ஆட்சியர் வழங்கியிருந்தார். ஆனால், இரண்டு மாதங்கள் கடந்த பிறகும் அதில் சிறு முன்னேற்றம் கூட இல்லை. கொடுத்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்த ஆக்கப்பூர்வ மான எதையும் ஆட்சியர் செய்யவில்லை” என்று குற்றம் சாட்டினார். மேலும், “இந்தக் காலத்தில் நிலம் கொடுத்த விவசாயிகள் பலர் இறந்து விட்டனர். எந்த விதமான இழப்பீட்டையும் பெறாமலேயே இறந்து விட்டனர். தற்போது அந்த குடும்பங்களின் வாரிசுகளுக்காவது இழப்பீடு கிடைக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நோக்கம்” என்ற பெ. சண்முகம், “இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று, நிலம் வழங்கிய அனைத்து விவசாயிகளுக்கும் சட்டப்படியான இழப்பீட்டை பெற்றுத்தர மாவட்ட நிர்வாகமும், ஆட்சியரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகளிடம், காவல்துறையினர் அராஜகமான முறையில் நடந்து கொண்டதை வன்மையாக கண்டிப்பதாகவும் பெ. சண்முகம் குறிப்பிட்டார்.