காங்கேயம் அருகே அரசு பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் 3 பேர் பலி, 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அறிவழகன்(25), செந்தில்குமார் (24), பிரபு (23), சபரிராஜா (25), ஜெகன் (24), கோகுல்கிருஷ்ணன் (18) மற்றும் கந்தசாமி(24) ஆகிய 7 பேரும் பழனி கோயிலுக்கு வேன் மூலம் சென்றுள்ளனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு, மீண்டும் பழனியிலிருந்து சேலத்திற்கு புறப்பட்டுள்ளனர். நண்பரான அறிவழகன் வேனை ஓட்டியுள்ளார்.
அப்போது நள்ளிரவு 12 மணியளவில் காங்கேயம் அருகே தாராபுரம் சாலையில் தனியார் அரிசி ஆலை என்ற பகுதியில் இவர்கள் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக, எதிரே பழனி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த அறிவழகன் மற்றும் வேனுக்குள் இருந்த செந்தில்குமார் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேனுக்குள் இருந்த மீதி 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து பிரபு, சபரிராஜா, ஜெகன், கோகுல்கிருஷ்ணன், கந்தசாமி ஆகிய 5 பேரையும் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உடனடியாக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக செல்லும் வழியிலேயே பிரபு பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு ஜெகன், கோகுல்கிருஷ்ணன், கந்தசாமி, சபரிராஜா ஆகிய 4 பேரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதனை தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.