districts

img

திருப்பூர்: சாலைகளை செப்பனிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் மரக்கன்று நட்டு போராட்டம்!

திருப்பூர், டிச. 7 - திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள சாலைகளை செப்பனிட வலியுறுத்தி சேறும் சகதியுமான சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மரக்கன்றுகள் நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்திற்கு உட்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில் பல ஆண்டு காலமாக வடிகால் வசதி இல்லாமல் சாலைகளில் கழிவுநீர் மழைநீர் தேங்கி சாலை குண்டும் குழியுமாகவும் சேறும் சகதியுமாக உள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தும் சூழ்நிலையில் அவ்வப்போது தற்காலிகமாக மண்ணை கொட்டி சரி செய்யும் ஏற்பாட்டை மட்டுமே மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அண்மையில் பெய்த மழையால் இப்பகுதியில் களிமண்ணால் தேங்கி இருந்த சாலையில் 15க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் சென்ற போது வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்தனர்.

எனவே இப்பகுதியில் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக வடிகால் வசதியை ஏற்படுத்தி மழைநீர் கழிவுநீர் வெளியேறி செல்ல நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும், அத்துடன் மோசமான நிலையில் உள்ள இப்பகுதி சாலையை சீரமைக்க வேண்டும். பிஎன் ரோடு பூலுவபட்டி சந்திப்பிலிருந்து வாவிபாளையம் வரை குண்டும் குழியுமான சாலையை புதிய தார் சாலையாக மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மரக்கன்றுகள் நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.