districts

img

தாராபுரத்தில் தீக்கதிர் நிருபர் வாகனத்தை பறித்து வைத்து மிரட்டல்: காவல்துறைக்கு திருப்பூர் மாவட்ட செய்தியாளர் சங்கம் கண்டனம்

தாராபுரத்தில் தீக்கதிர் நிருபர் ஆர்.ராஜாவிடம் பழிவாங்கும் நோக்கத்தோடு நடந்து கொண்ட காவல்துறைக்கு திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.கார்த்திகேயன், செயலாளர் எஸ்.கதிர்வேல் ஆகியோர் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த ஒரு சில தினங்களுக்கு (20-9-22) முன்பாக தீக்கதிர் நாளிதழில் தாராபுரம் வட்டாரத்தில் நடைபெற்று வரும் தொடர் திருட்டு சம்பவங்கள் மற்றும் காவல்துறையின் அலட்சியம் குறித்து ராஜா செய்தி வெளியிட்டு இருந்தார்.இந்தப் பின்னணியில் அவரை மிரட்டும் சம்பவம் நடந்திருக்கிறது. வியாழக்கிழமை இரவு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த சமயத்தில், ஒரு காவல் ஆய்வாளர், இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் இருந்து அவரது வாகனத்தை பறித்து வைத்துள்ளனர். சிறிது நேரத்தில் காவல் துணை கண்காணிப்பாளரும் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார். சம்பவம் நடைபெற்ற விதத்தை பார்க்கும் பொழுது அது ராஜாவை திட்டமிட்டு மிரட்டும் நடவடிக்கையாகவே தெரிகிறது.

சமூகத்தில், அரசு மற்றும் காவல்துறை நிர்வாகத்தில் நடைபெறும் தவறுகளை, குறைபாடுகளை, பலவீனங்களை சுட்டிக்காட்டி செய்தி வெளியிடுவது பத்திரிக்கையாளர்களின் ஜனநாயக கடமையாகும். அப்படி செய்தி வெளியிடும் பொழுது அதன் தன்மையைப் புரிந்து கொண்டு ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பு. அதற்கு மாறாக செய்தி வெளியிட்டவரை வஞ்சக நோக்கத்துடன் மிரட்டுவதும், அவர்களது வாகனத்தை பறித்து வைத்துக் கொண்டு மன உளைச்சல் ஏற்படுத்துவதும், அச்சுறுத்துவதும் சரியல்ல. தாராபுரம் காவல்துறையினரின் இந்த ஜனநாயக விரோத செயல்பாட்டை திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து காவல் அதிகாரிகள் மீதும் திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் துறையும், அந்த துறை ரீதியான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. 

எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, தமிழக அரசு உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம், இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

;