பாபநாசம், டிச. 5 - பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்டக்குடியிலிருந்து கூனஞ்சேரி செல்லும் சாலை அருகில் இந்த கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு கும்பகோணத்தை அடுத்துள்ள கிராமங்களில் இருந்தும் குடிமகன்கள் வந்து செல்கின்றனர். மாலை நேரங்களில் குடிமகன்கள் சாலையை ஆக்கிரமித்து விடுகின்றனர். இதனால் இந்த சாலையில் பெண்கள், கிராம மக்களால் நடந்துச் செல்ல முடிவதில்லை. இந்தக் கடை வழியாகத்தான் கூனஞ்சேரி, பட்டவர்த்தி, அனுமாநல்லூர், புள்ளபூதங்குடி, திருவைக்காவூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டும். மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி சென்று வரும் மாணவிகளால் இந்தச் சாலையில் தனித்துச் செல்ல முடியாது. குடிமகன்களின் கேலி, கிண்டலுக்கு ஆளாக நேரிடுகிறது. குடிமகன்கள் இந்த சாலையில் செல்லும் வாகனங்களை வழி மறிப்பதிலிருந்து, உள்ளாட்சி அமைப்பில் பொறுப்பில் இருப்பவர்கள்கூட தப்புவதில்லை.
சுற்றியுள்ள கிராமங்களில் பணியாற்றும் பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் குடிமகன்களின் தொல்லைக்கு பயந்து ஊரைச் சுற்றி செல்ல வேண்டியுள்ள நிலை உள்ளது. இதேபோன்று பாபநாசம் - சாலியமங்கலம் சாலையில் ரயில்வே கேட் அருகே அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்தச் சாலையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தனியார் கல்லூரி உள்ளது. இந்தப் பள்ளி, கல்லூரிக்குச் செல்ல மாணவ, மாணவிகள் அரசு டாஸ்மாக் கடையை கடந்துதான் செல்ல வேண்டும். சில குடிமகன்கள் கடை அருகிலுள்ள மரத்தடியை பாராக்கி விடுகின்றனர். சில குடிமகன்கள் ஆடை அவிழ்ந்து கிடப்பது தெரியாமல் தரையில் விழுந்து கிடக்கின்றனர். இதனால் இச்சாலை வழியே நடந்துச் செல்லும் மாணவிகள், பெண்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இந்த கடைகளையும் அப்புறப்படுத்த வேண்டுமென குடியிருப்புவாசிகள், மாணவிகள், பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.