தஞ்சாவூர், டிச.5 - தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா வரவேற்றார். ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 1,002 பயனாளிகளுக்கு, ரூ.4 கோடியே 27 லட்சத்து 41 ஆயிரத்து 351 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், திருவோணம் ஒன்றியம் ஊரணிபுரத்தில், 568 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 73 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மருங்கப்பள்ளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 1,102 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 39 லட்சத்து, 11 ஆயிரத்து 712 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், பேராவூரணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 910 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 82 லட்சத்து 70 ஆயிரத்து 74 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். தொடர்ந்து பள்ளிக் கட்டிடம், சாலைப்பணிகள், இல்லம் தேடி கல்வித்திட்டப் பணிகள் ஆகியவற்றை அமைச்சர் தொடங்கி வைத்தார். தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், எம்எல்ஏ.,க்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், பேராவூரணி என்.அசோக்குமார், பட்டுக்கோட்டை கா.அண்ணாதுரை மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.