districts

img

சமரசமில்லா போராளி தோழர் எம்.சண்முகம் நினைவை போற்றுவோம்!

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்க வீரவரலாற்றில் தடம் பதித்த பல தலைவர்கள் வரிசையில் தோழர்.சண்முகமும் ஒருவர். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் காவாலக்குடி கிராமத்தைச் சார்ந்த மருதப்பன் - முத்தம்மாள் தம்பதியருக்கு மகனாக 24.06.1932-ல் பிறந்த இவர் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். குடும்ப நிலைமையை கருத்தில் கொண்டு தாய் தந்தை கூலி வேலை செய்த திருமாஞ்சோலை நீலகண்டன் பண்ணையில் விவசாயக் கூலிவேலை செய்து வந்தார். பகுத்தறிவு சிந்தனையும், விசாலமான அரசியல் பார்வையும் கொண்ட இவர், அப்பகுதியில் ஜனசக்தி, சுதேசமித்ரன், தினமணி, தினத்தந்தி போன்ற பத்திரிகைகளை விநியோகித்து வந்த தோழர் என்.மணியன் (சிபிஎம் மூத்த தலைவர்) அவர்களிடம் பத்திரிகைகளை வாங்கி படிப்பது வழக்கம். தினத்தந்தி நாளிதழில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதி வந்த “ஈட்டி முனை” என்ற தொடர் கட்டுரையை படித்தார். இது பெரிய தாக்கத்தையும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது ஈர்ப்பையும் அவருக்கு ஏற்படுத்தியது. 

1954-ல் மணக்கால் கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் பேசிய தோழர் எம்.வி.சுந்தரத்தின் பேச்சு இவரை மென்மேலும் கம்யூனிஸ்ட் கட்சியின் பக்கம் ஈர்த்தது. 1958-ல் கண்கொடுத்தவனிதம் கட்சிக் கிளையில் கிளைச்செயலாளர் தோழர் சேசய்யா முன்னிலையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆனார். 1960-களில் நன்னிலம் தாலுக்கா, பூதமங்கலம், தென்பாதி மற்றும் முகந்தனூர் செட்டியார் பண்ணையில் கூலி உயர்வு 5 படி நெல் கேட்டு போராட்டம் நடைபெற்றது. இதில் நன்னிலம் தாலுக்கா செயலாளர் ஜி.வீரய்யன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.ஞானசம்பந்தன், தஞ்சை மாவட்ட செயலாளர் எம்.காத்தமுத்து போன்ற தலைவர்களின் வழிகாட்டுதலின்படி நன்னிலம் தாலுக்கா உறுப்பினர் எம்.சண்முகம் அவர்கள் சகதோழர்களோடு கூலிப்போராட்டம் நடத்தி கூலி உயர்வு பெறப்பட்டது.

1961-ல் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நிலச்சீர்திருத்த சட்டத்தை திருத்தி 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் என வரம்பு நிர்ணயித்து நிலச்சீர்திருத்தம் செய்ய வேண்டி தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் பி.சீனிவாசராவ் தலைமையில் தமிழகம் முழுவதும் மறியல் போர் நடைபெற்றது.  15 நாட்கள் தஞ்சை மாவட்டம் முழுவதும் விளக்க பிரச்சார கூட்டங்கள் நடைபெற்றன. இதில் கே.ஆர்.ஞானசம்பந்தன், சாமிநாதன் போன்ற பல தலைவர்களுடன் சண்முகமும் கலந்து கொண்டார். செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் மறியல் போராட்டத்தில் பல தோழர்களோடு சண்முகமும் கைதாகி திருச்சி சிறையில் 3 மாதம் தண்டனை பெற்றார். 1960-களில் விவசாய தொழிலாளர் சங்கத்தில் நன்னிலம் வட்ட செயலாளராக சண்முகம் செயல்பட்ட காலத்தில் முகந்தனூர், மேலபாலையூர், மணப்பறவை, திருக்கண்டீஸ்வரம் போன்ற கிராமங்களில் நடைபெற்ற கூலி உயர்வு போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்தார். 1964-களிலிருந்து விவசாயத் தொழிலாளர் சங்கத்தில் தலைஞாயிறு எஸ்.வடிவேல், ஜி.பாரதிமோகன், பி.எஸ்.தனுஷ்கோடி, ஜி.வீரய்யன், எஸ்.கணேசன், எம்.துரைசாமி, வி.கே.முத்துச்சாமி, எம்.செல்லமுத்து போன்ற தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர்களுடன் மாவட்ட துணைத் தலைவராகவும், துணைச் செயலாளராகவும் 1986 வரை விதொச சங்கத்தில் செயல்பட்டார். 

1962-ல் கீழதிருமதிகுன்னத்தில் கட்சி கொடியேற்று விழா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கலவரத்தில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் கொடுத்த பொய்ப்புகாரில் சின்னபிள்ளை, சண்முகம் மற்றும் பெண்கள் உட்பட பலர் 3 மாதம் தண்டனையை திருச்சி சிறையில் அனுபவித்தனர். 1963-ல் அம்மையப்பன் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கை விளக்க அரசியல் பொதுக்கூட்டம் தோழர் ஏ.கே.கோபாலன் தலைமையில் நடைபெற்றது. மிகப்பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்த பல தோழர்களோடு சண்முகம் முன்னின்று செயல்பட்டார். 1964-ல்  பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தஞ்சை மாவட்டத்தில் கைது செய்யப்பட்டபோது மன்னை.ஏ.நடராஜன் பொறுப்பு செயலாளராக செயல்பட்ட காலத்தில் தோழர் சண்முகம் தலைமறைவாக இருந்து மாவட்டம் முழுவதும் சென்று கட்சி பணியாற்றினார். 1966-ல் குளிக்கரை கிருஷ்ணமூர்த்தி ஐயர் பண்ணையின் ஏஜெண்ட், நடவு நடும் தலித் பெண்களை இழிவாக பேசியதைக் கண்டித்து கட்சியின் சார்பில் “வெளக்கமாறு போராட்டம்” நடைபெற்றது.

இதில் 20-க்கும் மேற்பட்ட தலைவர்கள், பெண்கள் கைது செய்யப்பட்டு நாகை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். பிறகு வழக்கில் விடுதலை ஆனார்கள்.  1966 நவம்பர் 16 முதல் 20 வரை 5 நாள் கட்சியின் மாநிலக்குழு கூட்டமும், பி.ராமமூர்த்தி கலந்து கொண்ட பிரம்மாண்டமான அரசியல் விளக்க பொதுக்கூட்டமும் குடவாசலில் நடைபெற்றது. இந்த ஏற்பாடுகளை சிறப்புற பல தோழர்களோடு இணைந்து சண்முகம் செய்தார். 1968-நவம்பர் மாதம் குளிக்கரையில் நடைபெற்ற கட்சியின் 8-வது மாவட்ட மாநாட்டில் எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.பாலசுப்ரமணியன் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் மாவட்ட செயலாளராக கே.ஆர்.ஞானசம்பந்தன் தேர்வு செய்யப்பட்டார். இதில் எம்.சண்முகம் மாவட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். நன்னிலம் தாலுக்கா செயலாளராக எம்.சண்முகம் 10 ஆண்டுகள் 1978 வரை செயல்பட்டார். டி.பி.ராமச்சந்திரன், டி.மாணிக்கம், எம்.துரைசாமி, வி.பழனிவேல், ஆர்.எஸ்.நடராஜன், கே.கண்ணுசாமி, ஆர்.மாணிக்கம் போன்றவர்களோடு இணைந்து கட்சி பணியாற்றினார். 1978 முதல் 1985 வரை குடவாசல் ஒன்றிய செயலாளராகவும், 1968 முதல் 2007 வரை கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழு உறுப்பினராகவும், சில ஆண்டுகள் செயற்குழு உறுப்பினராகவும் கட்சிப் பணிகளில் செயல்பட்டார். 

1970-ல் நன்னிலம் வடுவக்குடி  பண்ணையில் டிராக்டர் மறியல் போராட்டத்தில் அடிதடி, தள்ளுமுள்ளு ஆனது. இதில் கோவிந்தன், கண்ணுசாமி, உத்திராபதி, சண்முகம் மற்றும் பெண்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு பெண்ணுக்கு சிறையிலேயே பிரசவம் ஆனது. பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.  1973-ல் சண்முகம் - ராஜேஸ்வரி ஆகியோருக்கு தோழர்.என்.சங்கரய்யா தலைமையில் திருமணம் நடைபெற்றது. இவருடைய மகன்கள் மற்றும் மகள்கள் மார்க்ஸ், ராஜகுரு, பொன்னி, கோமதி ஆகியோர் கட்சியின் ஆதரவாளர்களாக உள்ளனர். 

தீண்டாமை கொடுமைக்கு எதிரான போராட்டங்கள்

வடுவக்குடி, விளாகம் ஆகிய கிராமங்களில் டீக்கடைகளில் தலித் மக்களுக்கு தனிக்குவளை மற்ற பிற சாதியினருக்கு தனிக்குவளை என்ற பாகுபாடான இரட்டை குவளை முறையை எதிர்த்து கட்சியின் சார்பில் போராடி வெற்றி பெற்றார். திருமாஞ்சோலை முருகையா உடையார் பண்ணையில் தாழ்த்தப்பட்ட கூலித்தொழிலாளர்களை சாட்டையால் அடிப்பதை எதிர்த்து போராட்டம் நடத்தி சாட்டையால் அடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. காவாலக்குடியில் கோவில் திருவிழாவில் சாமி தூக்க சாதி இந்து இளைஞர்கள் செல்ல வேண்டும், “ஏன் சாமி நடந்து சென்று மக்களை பார்க்காதா?” என்று சண்முகம் மட்டும் செல்லவில்லை. இவர் தந்தை எவ்வளவோ வற்புறுத்தியும் செல்லவில்லை. கோவில் பூசாரி வீட்டிற்கு வந்து அடித்தும் சாமி தூக்கச் செல்லவில்லை. 1976-ல் தலித்துகள் அல்லாத சாதி இந்துக்கள் “குடியானவர்கள் சங்கம்” அமைத்தனர். அதில் சண்முகம் மட்டும் சேரவில்லை. ஆகையால் டீ கடையில் டீ கொடுக்கக்கூடாது. முடிவெட்டக்கூடாது. மீறினால் 200 அபராதம் என அறிவிக்கப்பட்டது. இதை மீறி சண்முகம் ஒருநாள் டீ கடைக்குச் சென்று டீ தா என்றார். டீ கடைக்காரன் பால் இல்லை தாமதமாகும் என சொல்ல பரவாயில்லை பால் வந்ததும் டீ குடித்துவிட்டுப் போகிறேன் என அமர்ந்தார். வேறு வழியில்லாமல் கடைக்காரர் டீ கொடுக்க டீ குடித்துச் சென்றார். இத்தீண்டாமை பிரச்சனை காலப்போக்கில் சரியானது.  குளிக்கரை மாரியம்மன் கோவில் திருவிழாவில் தலித் மக்களை அனுமதிக்கவில்லை. இதனை எதிர்த்து கட்சி மூலம் தலித் மக்களை முன்னிலைப்படுத்தி காவடி எடுக்கும் போராட்டத்தை கட்சி மூலம் நடத்தினார். இதில் அடிதடி கலவரம் ஏற்பட்டது. பிறகு தலித் மக்கள் கோவில் திருவிழாவில் அனுமதிக்கப்பட்டனர்.      அரசவனங்காடு மாரியம்மன் கோவில், முகந்தனூர் ஒட்டுத்திண்ணை மாரியம்மன் கோவில் திருவிழாவில் தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டபோது கட்சியின் சார்பில் சண்முகம் போன்ற தலைவர்கள் முன்னின்று போராடி வெற்றி பெற்றனர். 

தோழர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு

1975-ல் மேலப்பாலையூர் தமயன் படுகொலை, குடவாசல் முத்துக்கிருஷ்ணன் படுகொலை, 1994 அக்டோபர் 11-ல் அம்மையப்பன் எம்.கண்மணி வெட்டி படுகொலை, குடவாசல் சி.தங்கையன் அடித்துக் கொலை போன்ற கட்சி ஊழியர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு முன்னின்று சக தோழர்களோடு சண்முகமும் போராடினார்.  திருக்கொட்டாரம் கூலி போராட்டம் தீவிரமடைந்த சமயத்தில் நன்னிலம் தாலுக்கா முழுவதும் கட்சியின் தோழர்களை திரட்டி சென்று திருக்கொட்டாரம் பகுதி தோழர்களுக்கு சண்முகம் பாதுகாப்பு கொடுத்தார். திருக்கண்ணமங்கையில் தரிசு நிலங்களை எடுத்து ஏழை, எளிய உழைப்பாளி மக்களுக்கு கட்சி மூலம் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்த நிலப்போராட்டத்தை சண்முகம் முன்னின்று நடத்தினார்.  எந்தவொரு பிரச்சனையிலும் மார்க்சிய வழியில், சமரசமில்லாமல் கறாராக இருந்து போராடி வெற்றி பெறுவதில் சண்முகம் உறுதியானவராக கடைசி வரை திகழ்ந்தார். தீக்கதிர், செம்மலர், கட்சி புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் உள்ளவர். இளைஞர்களிடம் அன்பாக பழகக்கூடியவர். எளிமையான அணுகுமுறையும், நேர்மையும் உள்ள கூலித்தொழிலாளியாக இருந்து கம்யூனிஸ்ட் தலைவராக உயர்ந்த தோழர்.சண்முகம் 91 வயதில் 27.11.2021 சனிக்கிழமையன்று காலமானார்.  அன்று கனமழை பெய்த போதும் திரளான தோழர்கள் கலந்து கொண்டது அவரது அரசியல் பொது வாழ்க்கைக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும். அவர் விட்டுச் சென்ற பணியை முன்னெடுத்து செல்வோம்! வீரதீர தோழருக்கு செங்கொடி தாழ்த்தி வீர வணக்கம் செலுத்துவோம்.

ஜீ.வெங்கடேசன்

 

;