மயிலாடுதுறை, ஜூலை 2-
மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில், அருணாசலக்கவிராயருக்கு நினைவிடம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி வட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் பொறையாரில் நடை பெற்றது. சங்கத் தலைவர் ராசமாணிக்கம் தலைமை வகித்தார். தில்லையாடியில் அருணா சலக்கவிராயருக்கு சிலை நிறுவி, அவரின் தமிழ்த்தொண்டை பரப்பும் வகையில் செயல் பட்டு வரும், வெள்ளி விழா கண்ட தில்லையாடி அருணாசலக்கவிராயர் இயல் இசை நாடக மன்ற நிறுவனர் மற்றும் பொறுப்பாளர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். \
அருணாசலக்கவிராயர் மன்றத்தின் செயல் பாடுகள் குறித்து ஓய்வு பெற்ற அலுவலர் சங்கச் செயலாளர் சுப்ரமணியன், அமைப்பாளர் சா. ஜெகதீசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பாராட்டிப் பேசினர். தில்லையாடி அருணா சலக்கவிராயர் இயல் இசை நாடக மன்ற நிறு வனர் என்.வீராசாமி நன்றி கூறினார்.
கூட்டத்தில், தமிழிசை மூவருள் ஒருவரான அருணாசலக்கவிராயருக்கு, அவர் பிறந்த ஊரான தில்லையாடியில் தமிழக அரசு சார்பில் நினைவிடம் அமைக்க வேண்டும். தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அம்மா பள்ளி தெரு, நாடார் காளியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட சிதிலமடைந்த நிலையில் உள்ள அனைத்து சாலைகளையும் புதிதாக அமைக்க வேண்டும். தமிழுக்கு தொண்டாற்றிய சீகன் பால்கு வுக்கு தரங்கம்பாடியில் அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்க வேண்டும்.
தரங்கம்பாடி, மயிலாடுதுறை இடையே மீண்டும் ரயில் போக்கு வரத்து தொடங்க வேண்டும். பொறையாரி லிருந்து சென்னைக்கு இரவு நேரத்தில் கூடுதல் பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.