districts

தமிழ்நாடு நாள் விழா இலக்கியப் போட்டிகள்

கள்ளக்குறிச்சி, ஜூலை 7-

      தமிழ்நாடு நாள் விழாவையொட்டி மாண வர்களுக்கு கட்டுரை,பேச்சுப் போட்டிகள் நடைபெறும் என்று கள்ளக்குறிச்சி மற்றும் கிருஷ்ணகிரி ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

     தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்ட 18.7.1967 ஆம் நாளை பெருமைப்படுத்திடும் வகையில், ஆண்டு தோறும் ஜூலை 18 ஆம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிப்பு செய்யப்பட்டது.  

    அதன்படி,  கள்ளக்குறிச்சி மாவட்டத்தி லுள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் ஜூலை 12 அன்று கள்ளக் குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். இதற்கான தலைப்புகள் முதன்மை கல்வி அலுவலர் மூலம் சுற்றிக்கை அனுப்பப்படும்.  

   இப் போட்டிகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 97869 66833 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேச்சுப் போட்டிகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூலை 11 தேதி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் உரிய விண்ணப்பத்தில் பரிந்துரை பெற்று, ஜூலை 11 காலை 9 மணிக்குள் தங்கள் பெயரைப் பதிவு செய்து, போட்டியில் கலந்து கொள்ளலாம்.  

    தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமி ழறிஞர் கலைஞரின் சுவடுகள் தலைப்பில் கட்டுரை போட்டியும் தமிழ்த் திரை உலகத்தை புரட்டிப் போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல் எனும் பேச்சு போட்டியும் நடைபெறும். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்ற மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்திருக்கிறார்.

   இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7000, மூன்றாம் பரிசு ரூ.5000 மற்றும் பாராட்டுச் சான்று வழங்கப்படும். முதல் பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஜூலை 18 அன்று  தமிழ்நாடு நாள் விழாவில் முதல் பரிசு ரூ. 50,000, இரண்டாம் பரிசு ரூ.30,000, மூன்றாம் பரிசு 20, 000 வழங்கப் படும்.