அரியலூர் மே.14- அரியலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால், திமுக சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு வரக்கூடிய நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், திமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த கோடைக்கால தண்ணீர் பந்தலை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். இதனையடுத்து பொதுமக்களுக்கு இளநீர், நீர்மோர், வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவுப் பொருட்களை, அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். மேலும் தண்ணீர் பந்தல் 24 மணி நேரமும் செயல்படும் வகையில், நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியினருக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் முருகேசன், அரியலூர் நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன், திமுக மாவட்ட பொறியாளர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதே போல் அரியலூர் அண்ணா சிலை அருகிலும், கோடைகால தண்ணீர் பந்தலை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.