districts

லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளருக்கு சிறை 14 ஆண்டுக்குப் பின் தண்டனை

கும்பகோணம், மே 31-

     தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள ஆத னூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.சண்முகம், தனது  மனைவியை அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் தாக்கியதாக கபிஸ்தலம் காவல் நிலையத்தில் 2008-ஆம்  ஆண்டில் புகார் செய்தார்.  

    அப்போது, கபிஸ்தலம் காவல் நிலையத்தில் உதவி  ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சாமிதுரை (தற்போது  66 வயது) ரூ.500 லஞ்சம் கொடுத்தால், வழக்குப் பதிவு  செய்து செல்வராஜை கைது செய்வதாகக் கூறினார்.

    இது தொடர்பாக உதவி ஆய்வாளர் சாமிதுரையை சண்முகம் மீண்டும், மீண்டும் அணுகியபோது, இதே பதிலை சாமிதுரை கூறி வந்தார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சண்முகம் தஞ்சாவூர் ஊழல் தடுப்பு பிரிவு காவல் அலுவலகத்தில் 2009 பிப்ரவரி 13 அன்று புகார் செய்தார். இதன் பேரில் அப்போதைய ஊழல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சிவவடிவேல் வழக்குப் பதிந்து  சண்முகத்திடம் ரூ.500 லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வா ளர் சாமிதுரையை கைது செய்தார்.  

    இது தொடர்பாக கும்பகோணம் தலைமை குற்ற வியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத்  தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி டி. சண்முகப்ரியா விசாரித்து, ஓய்வு பெற்ற சாமிதுரைக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.6 ஆயிரம் அப ராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.