அரியலூர், ஜூன் 8- ஜெயங்கொண்டம் பகுதியில் சாலையோரத்தில் தொடர்ந்து கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அதிகாரிகளின் உத்தரவுகளையும் மீறி மருத்துவக்கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பெரியவளையம் வனத்துறைக்கு சொந்தமான முந்திரித்தோப்பு அருகே மழைநீர் வடிகால் வாய்க்கால் ஓடுகிறது. இதன் அருகே 5-க்கும் மேற்பட்ட இடங்களில் சுகாதாரச் சீர்கேட்டினை ஏற்படுத்தும் வகையில் சிலர் மருத்துவக் கழிவுகளை ஆங்காங்கே கொட்டிவிட்டு சென்று விட்டனர். மேலும் அதே இடத்தில் இறைச்சிக் கழிவுகள், உடைக்கப்பட்ட சாராயப் பாட்டில்கள் ஆகியவை கொட்டப்பட்டு இருப்பதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொன்னேரியில் மூட்டை மூட்டையாக மருத்துவக் கழிவுகளை கொட்டி அசுத்தப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தற்போது பெரியவளையம் பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாலையோரங்களில் மருத்துவக் கழிவுகளை கொட்டக்கூடாது என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்தும், அதனை மதிக்காத சமூக விரோதிகள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்த சில தினங்களாக போலி மருத்துவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் அரங்கேறி வரும் நிலையில், இது போன்ற மருத்துவ கழிவுகளை கொட்டுபவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.