districts

img

காவல்துறையின் ஒத்துழைப்புடன் போதைப் பொருள் விற்பனையா?

திருவாரூர், டிச.10 - தமிழகத்தின் நகர பகுதிகளில் விற்கப்படுகிற கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கிராம புறங்களிலும் பரவியுள்ளது மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது. இளைஞர்களின் வாழ்வு இதனால் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. போதைப்பொருள் விற்பனைக்கு காவல்துறையும் ஒத்துழைக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது என ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.  “வேண்டாம் போதை, வேண்டும் கல்வி, வேலை, சுகாதாரம்” என்ற முழக்கத்துடன் மினி மாரத்தான் ஓட்டம் திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இதனை துவக்கி வைத்து ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முதல் மத்தியக்குழு உறுப்பினரும், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி நள்ளிரவு மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய ஜவஹர்லால் நேரு, உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் போது நாம் விழித்துக் கொண்டிருக்கிறோம். நமது நாட்டில் கல்லாமை, இல்லாமை இவற்றை இல்லாமல் செய்ய வேண்டும். உணவு, வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறினார். 1980 ஆம் ஆண்டு உருவாகிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இதே முழக்கங்களை முன்வைத்து போராட்டங்களை தொடங்கியது. 
75 ஆண்டுகள் கடந்தும் விடுதலை பெற்ற இந்தியாவில் இந்த முழக்கங்கள் முடிவுக்கு வரவில்லை. 1978 ஆம் ஆண்டு கல்வி, வேலை, வேலை இல்லா கால நிவாரணம் ஆகியவற்றை முன்வைத்து மறைந்த தலைவர்கள் என்.நன்மாறன், கே.சி.கருணாகரன் தலைமையில் சென்னை நோக்கி சைக்கிள் பேரணி நடைபெற்றது. அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன், குறைந்த தொகையாக இருந்தாலும் நமது கோரிக்கையை ஏற்று படித்த இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரண தொகையை அறிவித்தார். அதற்கு முன்பாகவே மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு படித்த இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்கி முன்மாதிரியாக திகழ்ந்தார். 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இளைஞர்களையும், யுவதிகளையும் அணிதிரட்டி எல்லோருக்கும் வேலை, கல்வி, சுகாதாரம் என்ற கோரிக்கைகளை முன்வைத்தும், நாட்டுப் பற்றோடும் அணிதிரட்டி செயல்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக மக்களுக்கு பல நற்பணிகளை செய்து வருகிறது. கொரோனா காலத்தில் தமிழகம் முழுவதும் வாலிபர் சங்க கிளைகள் முழு மூச்சுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவையாற்றியது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் வாலிபர் சங்க தோழர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலமாக உதவி செய்ததுடன் இறந்தவர்களின் உடல்களையும் நல்லடக்கம் செய்தனர். 
இன்றளவும் நாட்டில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை போக்கவும், ஆளும் அரசுகளின் தவறுகளை சுட்டிக் காட்டவும் அதற்காக போராடவும் தொடர்ந்து இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கின்ற இயக்கமாக வாலிபர் சங்கம் திகழ்கிறது. 1980 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி வீரம் செறிந்த பஞ்சாப் மாநில லூதியானாவில் அமைக்கப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முதற்கூட்டத்தில் பங்கேற்றவன் என்ற பெருமையோடு இந்த ஓட்டத்தை துவங்கி வைப்பதில் நான் பெருமையடைகிறேன். பகத்சிங்கின் வாரிசுகளான உங்களின் இந்த ஓட்டம் நிற்காமல் தொடரட்டும். 
இவ்வாறு வாழ்த்தி உரையாற்றினார். 
சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.பி.ஜோதிபாசு தலைமையில் நடைபெற்ற இந்த மினி மாரத்தான் ஓட்டம், திருவாரூர் விளமல் பாலத்தில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக பழைய பேருந்து நிலையம், பெரியார் சிலை அருகில் நிறைவு பெற்றது. மாவட்ட தலைவர் எஸ்.முகமது சலாவுதீன், மாவட்ட பொருளாளர் ஏ.கே.வேலவன், மாவட்ட நிர்வாகிகள் ஆர்.எஸ்.சுந்தரய்யா, பி.ஜெயசீலன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநில செயலாளர் எஸ்.பாலா சான்றிதழ்கள் வழங்கி நிறைவுரையாற்றினார்.

;