districts

திருச்சி முக்கிய செய்திகள்

மழையால் இடிந்த வீடு நிதியுதவி வழங்கிய பேராவூரணி எம்எல்ஏ

தஞ்சாவூர், நவ.22 - பேராவூரணி அருகே மழையால் வீடு இடிந்த குடும்பத்துக்கு ஆறுதல் கூறி, பேராவூரணி எம்எல்ஏ நிவாரண உதவி வழங்கினார்.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குப்பத்தேவன் ஊராட்சி, செல்லப் பிள்ளையார் கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவதி.  இவரது கணவர் செல்வமுத்து. இருவரும் கூலி வேலை  செய்து வருகின்றனர். இந்நிலையில், வியாழக்கிழமை காலை இருவரும் வேலைக்கு சென்றிருந்த நிலையில், மழையால் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது.  நல்வாய்ப்பாக வீட்டில் எவரும் இல்லாததால் அசம்பா விதம் தவிர்க்கப்பட்டது. இதில், வீட்டில் இருந்த உபயோகப் பொருட்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை  உள்ளிட்ட ஆவணங்கள் சேதமடைந்தன. பேராவூரணி வரு வாய்த் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.  இதுகுறித்து தகவலறிந்த பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.5 ஆயிரம் நிதியுதவி அளித்தார். 

சிஐடியு ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு பேரவை

திருச்சிராப்பள்ளி, நவ.22 -  திருச்சி புறநகர் மாவட்டம் துறையூர் ஒன்றியத்தில் சிஐடியு ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு பேரவை நடந்தது. கூட்டத்திற்கு சாலையோர வியாபாரிகள் சங்க  மாவட்டச் செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன், ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்க செயலாளர் சிவானந்தம், கட்டு மான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பூமாலை  ஆகியோர் பேசினர். மாநில துணைத் தலைவர் கோபி குமார் நிறைவுரையாற்றினார். சிஐடியு ஒருங்கிணைப்பு குழு கன்வீனராக கணேசன் தேர்வு செய்யப்பட்டார். மாவட்டக் குழு உறுப்பினர் சங்கிலிதுரை நன்றி கூறி னார்.

ரூ.16 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு சிறை

பெரம்பலூர், நவ.22 - பெரம்பலூர் தெப்பக்குளம் அண்ணாநகரைச் சேர்ந்த வர் தியாகராசு. இவரிடம் கடந்த 2009 ஆம் ஆண்டு, கரூர் மாவட்டம் வேதாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஷாஜ கான் என்பவர் பெங்களூரில் உள்ள ஒரு கம்பெனியில் பணம் கட்டினால், அந்த பணம் ஆறு மாதத்திற்குள் இரட்டிப் பாக கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய தியாகராசு ரூ.16,38,581 பணம் கொடுத்துள்ளார். ஆனால் ஷாஜகான் கூறியபடி, இரட்டிப்பு பணம் 6 மாதம் கழித்து வழங்கப்படவில்லை. இத னால் ஏமாற்றமடைந்த தியாகராசு பெரம்பலூர் மாவட்ட  குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, ஆசை வார்த்தை கூறி  ஏமாற்றிய ஷாஜகானை கைது செய்து சிறையில் அடைத்த னர். பின்னர் ஷாஜஹான் ஜாமீனில் வெளியே வந்தார்.  இந்த வழக்கு பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில்  நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி ஷாஜஹானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயி ரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

நவ.29-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கரூர், நவ.22 - கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 29.11.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11  மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெறவுள்ளது. கரூர் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதி நிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாது இக்கூட்டத் தில் கலந்து கொள்ள வேண்டுமென ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.

லாரியில் ரகசிய அறை அமைத்து  இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி முக்கிய குற்றவாளியை தேடும் காவல்துறை

தஞ்சாவூர், நவ.22 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவ தாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தர வின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் டேவிட் தலைமையிலான தனிப்படையினர் பேராவூரணி பகுதியில் கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, வெள்ளிக்கிழமை அதிகாலை  சுமார் 3 மணியளவில் பேராவூரணியில் இருந்து  முடச்சிக்காடு பகுதியை நோக்கி லாரி  ஒன்று சென்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் பசுபதி மற்றும் தனிப்படையினர் லாரியை வழிமறித்து விசா ரணை நடத்தினர். அதில் ரகசிய அறை அமைத்து சுமார் 330 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.  அதனை பின் தொடர்ந்து, சொகுசு காரில் வந்தவர்களையும் காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ்  ராவத், ஒரத்தநாடு கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர் சஹனாஸ் இலியாஸ், பட்டுக் கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.  இதில் லாரியை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஊத்துமலை பெரமராஜ் (34) என்பவரையும், கஞ்சா கடத்த லுக்கு உறுதுணையாக இருந்த பேராவூரணி  அருகே உள்ள காரங்குடா பகுதியைச் சேர்ந்த  பாஜக பிரமுகரான அண்ணாதுரை (44), கஞ்சாவை பதுக்கி வைக்க உதவியதாக அம்மணிசத்திரம் பகுதியைச் சேர்ந்த முத்தையா (60) ஆகிய மூவரையும் பிடித்து  விசாரித்தனர்.  அப்போது, தஞ்சாவூர் விளார் ரோடு பகுதியைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி கருப்பையா (52) இவர்களை இயக்கியது தெரிந்தது. தலைமறைவாக உள்ள கருப்பை யாவை, காவல்துறையினர் தேடி வரும் நிலையில் கஞ்சா மூட்டைகள் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த தகவல் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கடத்த லுக்கு பயன்படுத்தப்பட இருந்த, அண்ணா துரைக்கு சொந்தமான 3 ஃபைபர் படகுகளை யும் சேதுபாவாசத்திரம் கடற்கரைப் பகுதியில்  இருந்து கைப்பற்றியுள்ளனர். மேலும் விசாரணையில், கஞ்சாவை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே  உள்ள அனகப்பள்ளி பகுதியில் இருந்து பெரமராஜ் லாரியில் ஏற்றி கொண்டு வந்த தும், முடச்சிக்காடு அருகே பாலம் ஒன்றில் லாரியை நிறுத்தி அண்ணாதுரைக்கு சொந்த மான காரில் கஞ்சா மூட்டைகளை ஏற்றிய தும், அதனை முத்தையா என்பவர் வேலை  பார்த்து வரும் தென்னந்தோப்பில் பதுக்கி  வைத்து, இலங்கையில் இருந்து தகவல் கிடைத்ததும், அண்ணாதுரைக்கு சொந்த மான படகில் கடத்துவதற்கு முயற்சி செய்த தும் தெரிய வந்துள்ளது. மூவரையும் பேரா வூரணி காவல் நிலையம் அழைத்துச் சென்று  வழக்குப் பதிந்து, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.  அண்ணாதுரை மற்றும் முக்கிய தலை மறைவு குற்றவாளி கருப்பையா இருவரும் பாஜக பிரமுகர்கள் என்பதும், லாரியில் போலி பதிவெண்களை பயன்படுத்தி உள்ளதும்  தெரிய வந்துள்ளது.

நுண்ணுயிர் உரங்களை இலவசமாக பெறலாம்

கும்பகோணம், நவ.22 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநக ராட்சியில் தயார் செய்யப்பட்ட நுண்ணுயிர் உரங்களை விவசாயிகள் இலவசமாக பெறலாம்  என கும்பகோணம் மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கும்பகோணம் மாநக ராட்சிப் பகுதியில் 12 வார்டுகள் வீதம் 4 மண்டலங் களாக பிரிக்கப்பட்டு மொத்தம் 48 வார்டுகள் அமைந்துள்ளன. இந்த 48 வார்டு பகுதி களில் உள்ள வீடுகள்-வர்த்தக நிறுவன திடக் கழிவுகள், மக்கும்-மக்காத குப்பைகள் என துப்புரவு பணியாளர்களால் தரம் பிரித்து, சேகரிக்கப்பட்டது. இவை கும்பகோணம் மாநக ராட்சி பகுதியில் பெருமாண்டி, பழைய நகராட்சி  அலுவலகம், பாரத்நகர், பாணாதுரை, தாராசுரம்  உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள நுண்ணு யிர் உரமாக்கும் மையத்திற்கு கொண்டு செல்லப் பட்டு அங்குள்ள அரவை எந்திரங்கள் மூலம் குப்பைகள் தூளாக்கப்படுகின்றன. பின்னர் நுண்ணுயிர் உரமாக்கும் மையத் தில் உள்ள தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு உர கரைசல் தெளித்து மக்க வைக்கப்படுகிறது. சுமார் 45 நாட்களில் நுண்ணுயிர் உரம் முழு வதுமாக தயார் செய்யப்பட்டு கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாயி களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நுண்ணுயிர் உரங்களை கும்பகோ ணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இலவசமாக பெற்று தங்களது சாகுபடி நிலங்களில் இட்டு பயனடையலாம். நுண்ணுயிர் உரம் இலவசமாக பெறுவது குறித்து தகவல்கள் பெற 9500608417, 9976045488, 9994221671, 9566496284 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாடு மீது பைக் மோதல்:  வாலிபர் பலி

அறந்தாங்கி, நவ.22 - சாலையில் நின்று கொண்டிருந்த மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கோபு (30). இவர் அறந்தாங்கி ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இரவு பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பேராவூரணி சாலை பெட்ரோல் பங்க் அருகே இரவு நேரத்தில் சாலையில் மாடு ஒன்று நின்று கொண்டிருந்தது.  அப்போது, கோபு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மாட்டின் மீது மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயமடைந்த நிலையில், மயங்கிக் கிடந்தார். இச்சம்பவத்தை பார்த்த அந்த வழியாகச் சென்ற வர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபுவை சிகிச்சைக் காக அறந்தாங்கி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கோபுவை பரிசோதித்த  மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக  தெரிவித்தனர். இதுகுறித்து அறந்தாங்கி காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.