பாபநாசம், ஜூலை 9 -
தஞ்சாவூர் மாட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் இலவச தையல் பயிற்சி மையம் திறப்பு விழா மற்றும் பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி யில், மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சக்கரம் பொருத்திய விலையில்லா மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாபநாசம் திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளா கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆளும் அறங்காவலர் காஜா முகையதீன் தலைமை வகித்தார். பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் 13 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.11,11,500 மதிப்பில் 4 சக்கரம் பொருத்திய விலையில்லா மோட்டார் சைக்கிளையும், ஆபிதீன் அறக்கட்டளை சார்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிளையும் வழங்கினார்.
பின்னர் தஞ்சை மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் இலவச தையல் பயிற்சி மையத்தை திறந்து வைத்து பேசினார். இதில் சிங்கப்பூர் கல்வி யாளர் நசீர்கனி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் கௌரவ செயலாளர் முஹமது ரபீ, செயலாளர் ரபீக் தீன், பி.ஏ முஹமது ரிபாயி எம்.எல்.ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.