districts

மானாமதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்குமா?

சிவகங்கை, ஜன.1- சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படாமல் உள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரத்தை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மானாமதுரை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து நீடிக்கும் மருத்துவர்கள் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘எம்ஆர்ஐ ஸ்கேன்’ உள்ளது. தலைக்காயம், தலையில் ஏற்படும் பிரச்சனைகள், நரம்பியல் கோளாறுகள் மற்றும் தசை, முதுகுத் தண்டுவடம், மூட்டு பாதிப்பு போன்றவற்றுக்காக தினமும் 20-க்கும் மேற்பட்டோருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பது வழக்கம். மருத்துவக்காப்பீட்டு அட்டை பெற்றுள்ள நோயாளிகளுக்கு இலவசமாக எடுக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு ரூ.2,300 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக ‘எம்ஆர்ஐ ஸ்கேன்’ இயந்திரம் இயங்கவில்லை. இதனால், நோயாளிகளை மதுரை அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கும் அவலநிலை உள்ளது. இதன் காரணமாக விபத்துக் காயம் மற்றும் அவசர நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.  ஹீலியம் தீர்ந்ததால் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க முடியவில்லை. மும்பையில் இருந்து ஹீலியம் வரவழைக்கப்பட்டுள்ளது. விரைவில் ‘ஸ்கேன்’ இயந்திரம் இயக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது. அதேபோல மானாமதுரையில் அரசு மருத்துவமனையில் 11 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். அந்த ஒரு மருத்துவரும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே உள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரில் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.  எனவே, ஏழை - எளிய மக்கள் மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கு வசதியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மானாமதுரை அரசு மருத்துவமனையிலும் உள்ள குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாக மருத்துவக் கல்லூரி தலைமையிடமும் மாவட்ட செயலாளர் மோகன் நேரில் வலியுறுத்தியுள்ளார்.