கரூர், ஜூலை 19 -
நில உச்சவரம்பு சட்டத்தின்கீழ் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மாவட்டம், நங்கவரம் பகுதியில் நிலம் வழங்கப்பட்டு அதில் இன்று வரை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலத்திற்கு இதுவரை பட்டா வழங்காமல் இருப்பதை கண்டித்தும் உடனடியாக பட்டா வழங்கிட வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குளித்தலை ஒன்றியக்குழு சார்பில், குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் பி.சங்கரநாராயணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கே.முகமது அலி சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல், விதொச மாவட்டச் செயலாளர் பி.ராஜூ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் இரா.முத்துச்செல்வன், ஒன்றியத் தலைவர் டி.இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.