மே 17 சீர்காழி, செம்பனார்கோவில், தரங்கம்பாடியில் குடிநீர் நிறுத்தம்
மயிலாடுதுறை மே 14- மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் செம்பனார்கோவில் ஒன்றியங்களில் பயன்பெறும் 134 கடலோர குடியிருப்புகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சிக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தில் எடக்குடி வடபாதி முதல் மாமாகுடி வரையிலான பிரதான குடிநீர் உந்து குழாய்களில் இளையமதுக்கூடம் ராதாநல்லூர், நாங்கூர் சாலை மற்றும் மாமாகுடி ஆகிய இடங்களில் பழுது ஏற்பட்டுள்ளது.இந்த பழுதினை சரிசெய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் இக்கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பயன்பெறும் சீர்காழி மற்றும் செம்பனார்கோவில் ஒன்றியங்களை சார்ந்த 30 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி ஆகிய பகுதிக்கு மே 17 அன்று குடிநீர் நிறுத்தம் செய்யப்படும். எனவே அன்றைய தினம் உள்ளாட்சி அமைப்புகள் உள்ளூர் நீராதாரங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கேட்டுக்கொண்டுள்ளார்.
மேட்டூர் அணையை ஆக.15 இல் திறக்கலாம்: மூத்த வேளாண் வல்லுனர் குழு பரிந்துரை
தஞ்சாவூர், மே.14 - மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாத நிலையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறக்கலாம் என மூத்த வேளாண் வல்லுனர் குழுவினர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை கையேடுகளை வெயிட்டு செய்தியாளர்களிடம் ஓய்வு பெற்ற வேளாண்மை மூத்த வல்லுநர்கள் பி.கலைவாணன், வி.பழனியப்பன், வி.கலியமூர்த்தி ஆகியோர் கூறுகையில், மேட்டூர் அணையில் தற்போது நீர் இருப்பு குறைவாகவே உள்ளது. இந்த தண்ணீரைக் கொண்டு குறுவை சாகுபடியை மேற்கொள்வது கடினம். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி ஜூன் முதல் ஜனவரி வரை 167.25 டிஎம்சி தண்ணீர் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து சேர வேண்டும். இத்துடன் ஆரம்ப இருப்பையும் சேர்த்தால் 182 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். தமிழகத்தில் 7.40 லட்சம் ஹெக்டர் நெல் சாகுபடியை நாற்று விட்டு நடவு செய்தால் 300 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் தேவை இருக்கும். இந்த ஆண்டில் இதை நடைமுறைப்படுத்த சாத்தியம் இல்லை. இருப்பினும் குறுவை, சம்பா பருவ காலங்களில் 50 விழுக்காடு பரப்பளவில் நேரடி விதைப்பு செய்து மற்ற பகுதியில் ஆற்று நீர், மழை நீரை பயன்படுத்தினால் சுமார் 230 டிஎம்சி நீர் தேவைப்படும்.இதற்கு ஜூன் மாதம் ஆரம்ப காலத்தில் குறைந்தது 68 டிஎம்சி யாவது இருக்க வேண்டும். நடப்பாண்டில் ஒருபோக சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஆகஸ்ட் 15-ஆம் தேதி அரசு திறக்க வேண்டும். எனவே, அணைத் திறப்பதற்கு முன்பாக அனைத்து ஆறுகள், வாய்க்கால்கள், நீர்நிலைகளை தூர்வாரி தயார் நிலையில் அரசு வைக்க வேண்டும். மேட்டூர் அணை 90 ஆண்டுகளில் மணல், கற்களால் அதன் நீர் கொள்ளளவு மிகவும் குறைந்துவிட்டது. எனவே அணையில் தேங்கியிருக்கும் சகதிகளையும், மணல்களையும் அகற்ற அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தனர். இதில் ஓய்வு பெற்ற வேளாண்மை மூத்த வல்லுநர்கள் பி.கலைவாணன், வி.பழனியப்பன், வி.கலியமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
பிளஸ் 1 பொதுத்தேர்வு: புதுக்கோட்டை 86.99 சதவிகிதம் தேர்ச்சி
புதுக்கோட்டை, மே 14- பிளஸ் 1 பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம் 86.99 சதவிகிதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 29ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பள்ளி மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) பொதுத்தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிட ப்பட்டன. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 178 பள்ளிகளில் இருந்து 21,084 பேர் தேர்வெழுதினர். இவர்களில் 9,818 பேர் மாணவர்கள், 11,266 பேர் மாணவிகள். தேர்வு முடிவுகளின்படி, 18,558 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 8131 பேர் மாணவர்கள், 10,426 பேர் மாணவிகள். இது 86.99 சதவிகிதமாகும். தேர்ச்சி சதவிகிதத்தின் அடிப்படையில் மாநில அளவில் புதுக்கோட்டை 29ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் 30ஆவது இடத்தில் இருந்து சற்றே முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசுப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளில் இருந்து மாவட்டத்தில் மொத்தம் 15,028 பேர் தேர்வெழுதினர். இவர்களில் 12,734 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 5,037 பேர் மாணவர்கள், 7,697 பேர் மாணவிகள். இது 84.74 சதவிகிதமாகும். 100 சதவிகிதம் தேர்ச்சி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 178 பள்ளிகளில் 39 பள்ளிகள் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், 27 மெட்ரிக் பள்ளிகள், 4 உதவி பெறும் பள்ளிகள், 2 சுயநிதிப் பள்ளிகள் மற்றும் 6 அரசுப் பள்ளிகள். 6 அரசுப் பள்ளிகள் புதுக்கோட்டை மாதிரிப் பள்ளி, தாந்தாணி, பெருமருதூர், தாஞ்சூர், அரிமளம் மற்றும் லெம்பலக்குடி ஆகிய 6 அரசுப் பள்ளிகள் 100 சதவிகிதத் தேர்ச்சி பெற்றுள்ளன.
கிணற்றில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் பலி
கரூர்,மே 14- கரூரில் கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். கரூர் ஆண்டாங் கோவில் புதூரைச் சேர்ந்தவர் ரமேஷ். தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்த இவரது மகன் அஸ்வின் (12). அதே பகுதியைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு படித்த ஸ்ரீதர் மகன் ஸ்ரீ விஷ்ணு (11), 6 ஆம் வகுப்பு படித்த இளங்கோ மகன் மாரிமுத்து (11) ஆகியோர் திங்கள்கிழமை காலை தங்களது பெற்றோர்களிடம் விளையாடச் செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றனர். மாலை 6 மணியாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டுப் பகுதியிலும் மற்றும் உறவினர் வீடுகளிலும் தேடினர். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 11 மணி அளவில் அதே பகுதியில் உள்ள ரவிச்சந்திரன் என்பவர் தோட்டத்து கிணற்றுப் பகுதிக்குச் சென்று பார்த்தனர். கிணற்றின் அருகே மூன்று பேரின் காலணிகளும் கிடந்துள்ளன. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள், உறவினர்கள் கரூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள் கிணற்றில் தேடி பார்த்ததில் மூன்று பேரின் உடல்களையும் நள்ளிரவு 12 மணியளவில் மீட்டனர்.கரூர் நகர போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிந்து கரூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை
அரியலூர், மே 14- அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகேயுள்ள சுண்டக்குடி, வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் மகன் விக்னேஷ்குமார்(எ)விக்கி(27). இவர் திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அருகேயுள்ள தோட்டக்காரத் தெருவில் தங்கி, கட்டிட வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா காலக் கட்டத்தில் ஊருக்கு வந்திருந்த அவர், 31.08.2021 அன்று 14 வயது சிறுமியை ஆரணிக்கு கடத்திச் சென்று தாலி கட்டி,பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அரியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, விக்னேஷ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி செல்வம், குற்றவாளி விக்னேஷ்குமாருக்கு, சிறுமியை கடத்தியமைக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை செய்தமைக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், மேலும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி செல்வம் உத்தரவிட்டார். இதையடுத்து விக்னேஷ்குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜராகி,வாதாடினார்.