சிவகாசி, மார்ச் 12- விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வ நத்தம் ஊராட்சியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ஏற்பாட்டில் குறுங்காடுகள் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராம சந்திரன், தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர் ஜி.அசோகன் ஆகியோர் பங் கேற்றனர். அப்போது, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறுகையில், ‘‘துரை வைகோவை அரசியலுக்கு கொண்டு வந்து கொடுத்தது நான் தான். தற்பொழுது அவர் முழுநேர அரசியல்வாதி ஆகிவிட்டார். வைகோவிடம் உங்களுக்கு பின்பு இந்த கட்சியை வழி நடத்திட துரை வைகோ பொருத்தமானவர் என்றேன்’’ என்றார். துரை வைகோ கூறுகையில், ‘‘மதவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்றி விடக்கூடாது என்பதற்காகவே கடந்த 7 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வழங்கப்பட்டது இந்த முறையும் மதிமுகவிற்கு ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. எந்த தொகுதியில் போட்டி என்பது விரைவில் முடிவாகும்’’ என்றார். இவ்விழாவில், மதிமுக சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன், டாக்டர் சதன் திருமலைக்குமார் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினரும் மூத்த தொழிற்சங்கத் தலைவரு மான எஸ்.மகபூப்ஜான் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.