districts

கோலி சோடாவுக்கு வயது 100

வேலூர்,ஜூலை 8-

    தமிழ்நாட்டில் 1980-களில் குளிர்பானம் என்றதும் நினைவுக்கு வருவது கோலி சோடா தான். வீட்டுக்கு விருந்தினர் வந்த தும் பெட்டிக் கடை அல்லது பலசரக்கு கடைக்கு சென்று கோலி சோடா வாங்கித் தரு வார்கள். அதன் பிறகு வெளிநாட்டு குளிர்பானங்கள் பிரபலமானது. குளிர்பானங்கள் எத்தனை வந்தாலும் கோலி சோடா மவுசு குறையவில்லை.

    தமிழ்நாட்டில் முதன் முதலில் வேலூரில் தான் கோலி சோடா தயாரானது.வேலூரில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க அந்த காலத்திலேயே பலவிதமான குளிர்பானங்களை பருகத் தொடங்கினர்.

    வேலூரை சேர்ந்த கண்ணுசாமி கோலி சோடா தயாரித்து முதன் முதலில் விற்பனை செய்ய விரும்பி னார். இதற்காக ஜெர்மனியில் இருந்து கோலி சோடா பாட்டில் இறக்குமதி செய்தார். 1924 ஆம் ஆண்டு முதன் முதலில் கோலி சோடாவை அவர் தயாரித்தார்.

    வேலூர் மாவட்டத்தில் சிறிய பெட்டி கடைகளுக்கு கோலி சோடா சப்ளை செய்யப்பட்டது.அந்த காலத்தில் சென்னை-பெங்களூரு சாலையில் பயணம் செய்த வர்கள் வழியிலுள்ள கிராமங்களில் கோலி சோடா குடித்திருப்பதை மறந்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு கோலி சோடா வேலூரில் பிரபலமாக இருந்தது.

    முதன் முதலில் தயார் செய்யப்பட்ட கோலி சோடா பாட்டில் இன்றும் வேலூரில் உள்ள கண்ணன் சோடா கம்பெனியில் அவரது தலைமுறையினர் பாதுகாப்பாக வைத்துள்ளார். அதில் மேட் இன் ஜெர்மனி என எழுதப்பட்டுள்ளது.தற்போது  பலவிதமான கோலி சோடா களை தயார் செய்து வருகின்றனர். அங்கிருந்து வட மாவட்டங்கள் முழுவதும் அவர்கள் கோலிசோடா விற்பனையை விரிவுபடுத்தியுள்ளார். கண்ணுசாமியால் தொடங்கப்பட்ட கோலி சோடா 100-வது ஆண்டை எட்டவுள்ளது.

     இதுகுறித்து சோடா கம்பெனி உரிமை யாளர்கள் கூறு கையில், “கண்ணுசாமி சோடா கம்பெனி தொடங்கிய போது உள்ளூரில் விற்பனை அதிகரித்தது. சுதந்திரத்திற்கு பிறகு கோலி சோடா விற்பனை மேலும் அதிகரித்தது. அந்த காலத்தில் ஜெர்மனியில் இருந்து பாட்டில் களை இறக்குமதி செய்தோம்.தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து பாட்டில்கள் கொண்டு வந்து சோடா தயாரித்து வருகிறோம்.

      1990 ஆம் ஆண்டு முற்பகுதி வரை சோடா விற்பனை அதிகமாக இருந்தது. அதற்கு பிறகு வெளிநாட்டு குளிர் பானங்கள் வரவால் ஓரளவு விற்பனை குறைந்தது. 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் மக்கள் கோலி சோடாவை அதிகளவில் அருந்த தொடங்கியதால் விற்பனை அதிகரித்தது என்றனர்.