districts

தஞ்சையில் 30 பேருக்கு மஞ்சள் காமாலை சுகாதாரமற்ற குடிநீர் பொதுமக்கள் புகார்

தஞ்சாவூர், ஜூலை 19-

     தஞ்சாவூரில் 30 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு மாநகராட்சி மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 33 ஆவது வார்டு கோரிகுளம் மற்றும் 36 ஆவது வார்டு பூக்கார வடக்குத் தெருவில், கடந்த  சில நாட்களாக அப்பகுதியை சேர்ந்த சிலருக்கு திடீரொன காய்ச்சல், வாந்தி போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது,  அவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய்க் கான அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், புதன்கிழமை வரை சுமார்  15-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் உட்பட கோரிகுளம் பகுதியில் 16 பேரும்,  பூக்கார வடக்குத் தெருவில் 14 பேரும் மஞ்சள்  காமாலை நோய் தாக்குதலுக்கு ஆளாகி  அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இதையடுத்து, மாநக ராட்சி சார்பில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள கோரிகுளம், பூக்கார வடக்குத் தெருவில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளன.

      தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்க ளுக்கு காய்ச்சல், ரத்தம், சிறுநீர் மாதிரிகள்  எடுக்கப்பட்டும், காய்ச்சல் அறிகுறி உள்ளவர் களுக்கு வீடு வீடாகச் சென்று மாத்திரை களும் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பணியை மாநகராட்சி மேயர் ராம நாதன், மாநகராட்சி நகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி ஆகியோர் கண்காணித்து வருகின்ற னர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,  “குடிநீருடன், கழிவு நீர் கலந்து சுகாதார மற்ற முறையில் வருகிறது.

     மாநகராட்சி ஊழி யர்கள் முறையாக குடிநீர் தொட்டி, சாக்கடை  பகுதிகளை சுத்தம் செய்வது இல்லை. சுகா தாரமற்ற குடிநீரை குடித்ததால்தான் குழந்தைகள் உட்பட பலருக்கும் மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வார்டு  கவுன்சிலர்களிடம் பலமுறை கூறியும் நட வடிக்கை எடுக்கவில்லை.

     மேலும், மாநகராட்சி மருத்துவமனையில் குழந்தைகளை காய்ச்சலுக்காக காண்பித்த போது மருத்துவர்கள் எதுவும் இல்லை என கூறி அனுப்பிவிட்டனர். ஆனால், காய்ச்சல் குறையாத நிலையில், தனியார் மருத்துவமனையில் காண்பித்த போது மஞ்சள் காமாலை இருப்பது தெரிந்தது” என்ற னர்.