districts

தாழ்த்தப்பட்ட மக்களைத் தலைநிமிரச் செய்தவர்

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு,  தமிழக உழைக்கும் மக்கள் வரலாற்றில்,  புகழ்மிக்க பகுதியாகும். தமிழகத்தின் நெற் களஞ்சியமான காவேரி டெல்டா,  பண்ணை யார்கள், மடாதிபதிகள், கோவில் தர்ம கர்த்தாக்கள் ஆகியவர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது. பண்ணையார்களின் நெற்களஞ்சியங் களை நிரப்பிய குத்தகை விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பண்ணை  அடிமைகளாய் வாழ்ந்தனர்.  அதிலும்  தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர் களோ, கூலி அடிமைகளாக, சாதிய ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாகி, வீடற்றவர்களாக, வாழ்க்கை விடியலுக்காக ஏங்கிய நிலை யில் மண் குடிசைகளில் வாழ்ந்து வந்தனர். விளைச்சலின் மிகப்பெரும் பகுதியை நிலப்பிரபுக்களுக்குக் கொடுத்துவிட்டு வறுமையில் வாடிய ஏழை எளிய விவசா யிகளை வர்க்கப்போராட்டத்தின் மூலம் உயர்த்தியது செங்கொடி இயக்கம். இப்பெருமைமிகு வீரஞ்செறிந்த வர லாற்றில் உயிர்த்தியாகம் செய்த தோழர்கள் பட்டியலில் நீங்கா இடம்பெற்றவர், தஞ்சை  தியாகி என். வெங்கடாசலம். தியாகி என்.வி. என்று என்றென்றும் போற்றப்படும் தோழர் என்.வெங்கடாசலம் அவர்கள், ஒன்றாக இருந்த தஞ்சை மாவட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயற்குழு உறுப்பினராக, தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவராக, திறம்படச் செயல்பட்டவர். மக்களுக்கான அயராத உழைப்பும், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு, விவ சாயத் தொழிலாளர்கள் கூலி உயர்வுக் கான போராட்டங்கள் என ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராளியாக செயல்பட்ட தோழர் என்.வி. அவர்களை,  மக்கள் மூன்று முறை ராயமுண்டான்பட்டி பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுத் தார்கள். பஞ்சாயத்துத் தலைவர் பொறுப்பை யும், மக்கள் சம உரிமைக்காகவும், தீண்டாமைக் கொடுமையை ஒழிப்பதற்காக வும் பயன்படுத்தினார்.

இதற்கான சட்டப் பூர்வ வழிமுறைகளையும் பயன்படுத்திக் கொண்டார். அவரைச் சந்திக்க தாழ்த்தப்பட்ட மக்கள் பஞ்சாயத்து அலுவலகத்திற்கோ அல்லது கட்சி அலுவலகத்திற்கோ வந்து  தரையில் அமர்ந்தார்களென்றால், அவர் களைக் கடுமையாகச் சாடி, அவரே எழுந்து வந்து அவர்களின் கைகளைப் பிடித்துத் தூக்கிவிட்டு, நாற்காலிகளில் அமரச் செய்திடுவார். சுரக்குடிபட்டியில் உள்ள அய்யனார் கோவில் குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் இறங்கி, நீர் மொண்டு குடிக்க முடியாது. தரையில் தாமரை இலையைச் சுருட்டி வைத்துக்கொண்டு நிற்க வேண்டும். சாதி இந்துக்கள் குளத்தில் தண்ணீர் எடுத்து வந்து இலையில் ஊற்ற வேண்டும். இக் கொடுமைக்கு தோழர் என்.வி. முடிவு கட்டினார். தாழ்த்தப்பட்ட மக்கள் குளத்தில் இறங்கி தண்ணீர் எடுக்கவும், குடிக்கவும் உரிமை பெற்றவர்களாக்கினார். இதனால்  ஊர் பெருந்தனக்காரர்களின் கோபத்திற்கு ஆளானார். இதுபோன்று பொதுக்குளங்களில் மீன்பிடி உரிமை, கிராமங்களில் டீக்கடை களில் நிலவிய இரட்டை டம்ளர் முறை,  பாசன வசதியில்கூட காட்டப்பட்ட பாகு பாடு, சுடுகாட்டுக்குப் பொதுப்பாதை போன்ற தீண்டாமைக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஏரி புறம் போக்கு, அரசு புறம்போக்கு நிலங்களை நிலமற்ற ஏழை மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சம உரிமை கிடைக்கச் செய்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவே தோழர் என்.வி. தன் வாழ்வை அர்ப்ப ணித்தார். இதன் காரணமாகவே அவர் ஆதிக்க சாதியினரின் ஆத்திரத்திற்கு ஆட்பட்டு அவர்களால் கொல்லப்பட்டார்.  மக்களுக்கான உயிர்த்தியாகம் என்ப தற்கு, மரணமே கிடையாது. மறைந்து 45  ஆண்டுகள் முடிந்தாலும், மக்கள் மனங்களில்  தோழர் என்.வி. நீங்காது நிலைத்து நிற்கிறார்.

ஆர்.மனோகரன்

;