districts

img

கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநரின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு கண்டனம்

கும்பகோணம்,மே 14- கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் மகேந்திர குமாரின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து தலைமை அலுவலகம் முன்பு அனைத்து சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாக இயக்குநர் மகேந்திர குமார் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அனைத்து பணியாளர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி, தொழிற்சங்கம் குறித்து அவதூறாகப் பேசி வருகிறார். கோடைகால வெயில் கடுமையாக உள்ள நிலையில் அனைத்து நகர் பேருந்துகளையும் முழுநேரமும்  இயக்க கட்டாயப்படுத்துகிறார். நடத்துநர்கள் முன் இருக்கையில் அமரக்கூடாது எனவும், தேர்தல் நடைமுறை அமலில் இருக்கும்  போது தன்னிச்சையாக வாய்மொழி உத்தரவு மூலம் பணி நிலைமைகளை மாற்றம் செய்தும், கிளைகள் மற்றும் பயிற்சி மையங்களின் எண்ணிக்கையை குறைப்பதும், புதுகை மண்டல டயர் புதுப்பிக்கும் பிரிவை மூடிவிட்டு திருச்சி மண்டலத்துடன்  இணைப்பதும் போன்ற தொழிலாளர்கள் விரோதப் போக்கை கடைப்பிடித்து வருகிறார் . மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாற்றுப் பணியை செய்து வந்த ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பணி வழங்காமல் நிறுத்தி வைப்பது, அவர்களால் செய்ய முடியாத வேலையை செய்ய சொல்லி நிர்பந்திப்பது, செய்ய முடியாவிட்டால் வேலையை விட்டு போகும்படி மிரட்டுகிறார்.  மருத்துவ விடுப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு கையிருப்பில் இருக்கும் பொது ஈட்டிய விடுப்பை கழிப்பது என தொழிலாளர்களுக்கு எதிராக  செயல்பட்டு வருகிறார் .இத்தகைய போக்கை கொண்ட நிர்வாக இயக்குநர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் மண்டல சிஐடியு பொதுச் செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார் . போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன முன்னாள் தலைவர் ஆர்.மனோகரன்,  சிஐடியு தஞ்சை மாவட்ட தலைவர் கண்ணன், செயலாளர் சி. ஜெயபால்  மற்றும் பல்வேறு மண்டலத் தலைவர்கள், பா.ம.க,தேமுதிக, அதிமுக தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.திருச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, கும்பகோணம், நாகை மண்டலங்களில் உள்ள தொழிலாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

;