districts

பள்ளி மாணவிக்கு உதவக் கோரி திருச்சி ஆட்சியரிடம் சிபிஎம் மனு

திருச்சிராப்பள்ளி, டிச.4 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது: திருச்சி உறையூரில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி படித்து வரும் 8 ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட புகாரின் பேரில் பள்ளி தாளாளர் ஜேம்ஸ் மற்றும் குற்றத்தை மூடிமறைத்த அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் அவரது மனைவி ஸ்டெல்லா மேரி ஆகியோர் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை வரவேற்கிறோம்.  மேலும் அந்த பள்ளியில் வேறு யாருக்கேனும் இதுபோல் பாலியல் ரீதியான தொந்தரவு தரப்பட்டதா என்பதை முழுமையாக சமூக நலத்துறை, காவல்துறை பெண் அதிகாரிகளை கொண்டு விசாரணை நடத்திட வேண்டுகிறோம். இந்நிலையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவிக்கு தந்தை இல்லை என்பதும் தாய் எங்கோ சென்று விட்டார் என்றும் தெரிகிறது. இவருக்கு இரண்டு சகோதரி மற்றும் ஒரு சகோதரன் இருக்கிறார்.  மேற்கண்ட சம்பவத்திற்கு பிறகு அவர்கள் அனைவரும் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டு விட்டார்கள். எனவே ஆட்சியர் தலையிட்டு படிப்பை தொடரவும் பாதுகாப்பாக வாழ்வதற்கும் உரிய உதவிகளை அம்மாணவிக்கு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

;