districts

img

ஓய்வு பெறும் நாளன்றே பணப் பலன்களை வழங்க வேண்டும் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, செப்.30 - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வு நாளன்றே பணப் பலன்களை வழங்க வேண்டும். 2020 மே மாதத்திற்கு பின் மரணம் அடைந்த, பணி ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணப்பயன்களை உடனே வழங்க வேண்டும். நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பணப்பலன்களை நிறுத்துவதை கைவிட வேண்டும்.  நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் ஓய்வூதியத்தை முறைப்படுத்த வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் ஓ.டி சம்பளம் வழங்க வேண்டும். பணி இடமாறுதல் செய்வதில் சங்க பாகுபாடு பார்ப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் வியாழனன்று திருச்சி மலைக்கோட்டை கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மண்டல தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் துவக்கவுரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சங்க பொதுச் செயலாளர் கருணாநிதி, துணை பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணி, பொருளாளர் சிங்கராயர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மண்டல செயலாளர் சண்முகம் ஆகியோர் பேசினர். முன்னாள் சங்க தலைவர் சம்பத் நிறைவுரையாற்றினார். சங்க துணை பொதுச்செயலாளர் முருகன் நன்றி கூறினார்.
பொன்னமராவதி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு துணைச் செயலாளர் தங்கமணி, துணைத்தலைவர் சின்னச்சாமி, செயற்குழு உறுப்பினர் பழனியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

;