திருச்சிராப்பள்ளி, பிப்.21- திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வெள்ளியன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், பாராளுமன்ற உறுப்பினர்கள், துரை வைகோ, அருண் நேரு, முரசொலி, சுதா, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள், சௌந்தர பாண்டியன் பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், அப்துல் சமது, கதிரவன், முத்துராஜா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்தக்கூட்டத்தில், துறை வாரியாக ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், இன்னும் முடிவு பெறாமல் நிலுவையில் உள்ள பணிகள், அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் தனித் தனியாக ஆய்வு நடதத்தப்பட்டது. இதில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.