சென்னை, மே 19- பழைய வண்ணாரப்பேட்டை சிங்காரத் தோட்டம் 8 ஆவது தெருவை சேர்ந்தவர் மேவாரம். அதே தெருவில் மொத்த ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். சனிக்கிழமை(மே 18) இரவு அவரது கடைக்கு போதையில் வந்த வாலிபர் ஒருவர் 4 ஜீன்ஸ் பேண்ட் வாங்கிவிட்டு பணத்தை கொடுக்கவில்லை. பணம் கேட்டதற்கு கத்தியை காட்டி மிரட்டியதுடன், வியாபாரம் செய்த பணத்தை மாமூலாக கேட்டு சத்தம் போட்டுள்ளார். அப்போது அருகில் உள்ள கடையில் இருந்த வியாபாரிகள் திரண்டு வந்தனர். இதையடுத்து, அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். ஆனால் வியாபாரிகள் சுமார் 1 கி.மீ. தூரம் விரட்டி சென்று பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து ராயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் வந்து மாமூல் கேட்டு மிரட்டிய வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர், வியாசர்பாடி சர்மா நகர் சேர்ந்த சஞ்சய் (23) என்பதும், அவர் மீது ஏற்கனவே 4 அடிதடி வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். கடந்த 13ஆம் தேதி இரவு சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் செருப்புக் கடை மற்றும் உணவகத்தில் மாமூல் கேட்டு உரிமையாளர்களை தாக்கியது குறிப்பிடத்தக்கது.