கடலூர், ஏப்.20- கடலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் கடலூர், விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வெள்ளியன்று வாக்குபதிவு நடைபெற்றது. இதில் 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 14 லட்சத்து 12 ஆயிரத்து 746 வாக்காளர் கள் வாக்களிக்க வசதியாக 1,509 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் 36 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், தாமதமாக வாக்குப் பதிவு நடந்தது. மேலும் மாலை 6 மணிக்கு பிறகும் வாக்குச்சாவடியில் வாக்களிக்க பலர் காத்திருந்ததால், அவர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் புதுப்பேட்டை அருகே எஸ்.ஏரிப் பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் அதிகபட்சமாக இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. 72.28 விழுக்காடு கடலூர் மக்களவைத் தொகுதியில் 4 லட்சத்து 96 ஆயிரத்து 28 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 25 ஆயிரத்து 27 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 59 பேரும் என மொத்தம் 10 லட்சத்து 21 ஆயிரத்து 114 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது 72.28 விழுக்காடு வாக்குப்பதி வாகும். கடலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. 250 டிரோன்களை பயன்படுத்தி இந்தியாவிலேயே முதல்முறையாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நடத்தினார். இருப்பினும் மக்கள் தேர்தலில் வாக்களிக்க போதிய ஆர்வம் காட்டவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலை விட, தற்போது நடந்த தேர்தலில் வாக்கு விழுக்காடு மிகவும் குறைந்துள்ளது. அதாவது கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 78.90 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு 73.64 விழுக்காடு மட்டுமே பதிவானது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நடந்த தேர்தலில் கடலூர் மக்களவைத் தொகுதியில் 72.28 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. இது கடந்த தேர்தலை விட 1.36 விழுக்காடு குறைவாகும்.