புதுச்சேரி, டிச.3- தீபாவளி பண்டிகையையொட்டி கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, புதுச்சேரி கட்டுமான நலவாரியத்தின் மூலம் பரிசு கூப்பன் வழங்கப்பட்டது. கட்டுமான தொழிலாளர் களுக்கு ரூ. 3000, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 என வழங்கப்பட்ட பரிசு கூப்பனுக்கு புதுச்சேரி கூட்டுறவு பல்பொருள் அங்காடியில் (அமுத சுரபி) மளிகை பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பரிசு கூப்பனை பெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், மளிகை பொருட்கள் வாங்க அமுதசுரபிக்கு சென்றனர். அங்கு தேவையான மளிகை பொருட்கள் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். இதனையடுத்து, புதுச்சேரி காந்தி வீதியிலுள்ள அமுதசுரபி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சங்க பிரதேச செயலாளர் கலியன் தலைமை தாங்கினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச செயலாளர் சரவணன், நகரச் செயலாளர் உள்ளிட்டோர் உரையாற்றினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அங்காடியின் மேலாண் இயக்குனர் பேச்சு நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.