சென்னை, டிச. 2 - மக்கள் பயன்பெறும் வகையில் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி புதனன்று (டிச.1) கே.கே.நகர் பணிமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கே.கே.நகர் பணிமனையில் இருந்து எம்ஜிஆர் நகர், நெசப்பாக்கம், மேற்கு கே.கே.நகர் வழியாக இ.எஸ்.ஐ மருத்துவ மனை செல்லும் பேருந்துகள், நேரடியாக இஎஸ்ஐ நிறுத்தத்திற்கு செல்கிறது. இதனால் மாணவர்கள், பணிக்கு செல்வோர் என பகுதிவாழ் மக்கள் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே,பேருந்துகளை மாற்று வழிதடத்தில் இயக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி மனு கொடுக்கும் இயக்கத்தை அறிவித்தது. இதனையடுத்து அவசரஅவசரமாக பேருந்துகள் பழைய வழித்தடத்தில் இயக்கப்பட்டது. சாலையில் உள்ள பள்ளங்களால் பழைய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கினால் விபத்து நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே, மாற்று பாதையில் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் இயக்கம் - ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனையொட்டி கிளை மேலாளரை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் இ.ரவி உள்ளிட்டோர் மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கே.கே.நகர் பணிமனையில் இருந்து புறப்படும் பேருந்து பி.டி.ராஜன் சாலை, லஷ்மணசாமி சாலை, பொன்னம்பலம் சாலை, அண்ணா பிரதான சாலை, நெசப்பாக்கம், முனுசாமி சாலை, ராமசாமி சாலை, பி.டி.ராஜன் சாலை வழியாக இஎஸ்ஐ செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதை பரிசீலிப்பதாக கிளை மேலாளர் உறுதி அளித்தார்.