districts

வீட்டு வேலை செய்த சிறுமி மர்ம மரணம்

சென்னை, நவ. 2- சென்னை அமைந்தகரை மேத்தா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடி யிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஸ் (35). இவர் சொந்தமாக பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி நிவேதிதா மற்றும் 6 வயது குழந்தை உள்ளனர். இந்நிலையில் நவாஸ் வீட்டில் கடந்த ஓராண்டாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தங்கி வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். வியாழனன்று தீபாவளி தினத்தன்று நவாஸ் வீட்டில் வேலை செய்து வந்த சிறுமி வேலை முடிந்து பாத்ரூமில் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது நீண்ட நேரமாகியும் குளிக்க சென்ற சிறுமி வெளியே வராததால் சந்தேகமடைந்த நவாஸ் மற்றும் அவரது மனைவி நிவேதிதா இருவரும் ஓடிச்சென்று பார்த்தபோது சிறுமி தரையில் மயங்கிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வெள்ளியன்று  மாலை வீட்டு உரிமையாளர் முகமது நவாஸ் தனது வழக்கறிஞர் மூலம் சிறுமி இறந்தது குறித்து அமைந்தகரை காவல் நிலை யத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நவாஸ் மற்றும் அவரது மனைவி நிவேதிதா முன்னி லையில் பாத்ரூமில் இறந்து கிடந்த சிறுமி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் கணவன்-மனைவி இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முகமது நவாஸ் சகோதரி மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி வேலைக்கு சேர்ந்துள்ளார். சிறுமியின் தந்தை மரணமடைந்ததால் தாயின் அரவணைப்பில் சிறுமி வளர்ந்து வந்தது தெரியவந்தது. மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுமி தனது தாயை பிரிந்து ஓராண்டாக முகமது நவாஸ் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் சிறுமி மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது. பொதுவாக 18 வயதுக்குட்பட்ட சிறார்களை வீட்டில் பணியமர்த்த கூடாது என சட்ட விதிகள் இருந்தும் நவாஸ் எப்படி 16 வயது சிறுமியை வீட்டில் வேலைக்கு அமர்த்தினார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் சிறுமியின் மரணத்துக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.